பக்கம்:அபிராமி அந்தாதி.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அபிராமி அந்தாதி

23

பெறும் பயன் அம்பிகையை உணர்வதாதலின் அதன் பரிமளம் என்றார். பனிமாலிமயப் பிடியே: "வளர்சிமய இமயப் பொருப்பில் விளையாடும் இளமென் பிடியே" (மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்), பிரமன் முதலாய தேவரென்றது பிரமன், திருமால், இந்திரன் முதலியோர்களை, “பிரமற்கும் அம்மனை” (தக்கயாகப்பரணி,77) என்பதையும், 'பிரமற்கும் அம்மனை என்ற உம்மையால் விட்டுணு புரந்தராதிகட்கும் தாயாதல் முடிந்தது' என்ற அதன் உரையையும் காண்க: "பிரமனைப் பண்டு பெற்ற பெருந்திரு” (தக்க, 752.) பிறந்துவிட்டமையால் இறத்தல் நிச்சயம்; ஆதலின் இம்முறை இறந்தால் மீட்டும் பிறவாமல் இருக்க வேண்டுமென்ற கருத்தால், 'இறந்து இனி இங்குப் பிறவாமல்' என்றார்.

22

கொள்ளேன் மனத்தில்நின் கோலம் அல்
லாதன்பர் கூட்டந்தன்னை
விள்ளேன் பரசம யம்விரும்
பேன்வியன் மூவுலகுக்
குள்ளே அனைத்தினுக் கும்புறம்
பேஉள்ளத் தேவிளைந்த
கள்ளே களிக்கும் களியே
அளிய என் கண்மணியே.

(உரை) பரந்த மூன்று உலகத்துக்குள்ளும் உள்ள பொருளே, ஆயினும் எல்லாப் பொருளுக்கும் புறம்பே உள்ளாய், அடியார்கள், உள்ளத்தே முற்றி விளைந்த இன்பமாகிய கள்ளே, அதனால் பிறவற்றை மறந்து ஆனந்த வெறிகொண்டு மகிழும் மகிழ்ச்சியே, இரங்கத்தக்க என் கண்ணுள் மணிபோன்றாய், அடியேன் என் உள்ளத்தில் தியானம் செய்யுங்கால் நின் திருக்கோல மல்லாத வேறொரு தெய்வத்தின் உருவத்தைச் சிந்தியேன்.

அபிராமி—4