உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அபிராமி அந்தாதி.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அபிராமி அந்தாதி

27



உடைத்தனை வஞ்சப் பிறவியை
உள்ளம் உருகும் அன்பு
படைத்தனை பத்ம பதயுகம்
சூடும் பணி எனக்கே
அடைத்தனை நெஞ்சத் தழுக்கைஎல்
லாம்நின் அருட்புனலால்
துடைத்தனை சுந்தரி நின் அருள்
ஏதென்று சொல்லுவதே.

(உரை) பேரழகியே, அடியேனது கன்மத்தால் வந்த பிறவியைத் தகர்த்தாய்; என் உள்ளம் உருகும்படியான அன்பை அவ்வுள்ளத்திலே உண்டாக்கினை; தாமரை போன்ற இரண்டு திருவடிகளைத் தலையால் வணங்கும் தொண்டை எனக்கென்றே ஒப்பித்தாய்; அடியேனது நெஞ்சில் இருந்த ஆணவம் முதலிய அழுக்கை எல்லாம் நினது கருணையாகிய தூய நீரால் போக்கினை; இங்ஙனம் செய்த நின் திருவருட் சிறப்பை அடியேன் என்னவென்று எடுத்துப் பாராட்டுவது!

ஆனந்தாதிசயத்தால் காரியத்தை முன் வைத்தும் காரணத்தைப் பின் வைத்தும் பேசுகிறார். பிறவி இனி இல்லை என்ற துணிபுபற்றி உடைத்தனை என்றார். அப்பிறவி தீர்வதற்குக் காரணம் உள்ளம் உருகும் அன்பு: அவ்வன்பு உண்டாதற்குக் காரணம் நெஞ்சிலுள்ள அறியாமை முதலியன அவளருளாலே நீங்குதல். பலகாலும் படிந்த அழுக்கை மெல்ல மெவ்ல நீரால் கழுவுதல்போலத் தன் திருவடித் தொண்டு புரிய வைத்தற்கு முன் மெல்ல மெல்ல நெஞ்சத்து அழுக்கைப் போக்கத் திருவருள் நீரைப் பெய்தாளென்றார். தாள் பணியவும் அருள் வேண்டுமென்பது. “அவனரு ளாலே அவன்றாள் வணங்கி” என்னும் திருவாசகத்தாற் பெறப்படும். பதயுகம்.