பக்கம்:அபிராமி அந்தாதி.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

அபிராமி அந்தாதி

பொன் என்னும் மூன்றன் ஆசையாகிய கடலிற் சிக்கி அதன் பயனாக இரக்கமற்ற யமனது கைப்பாசத்திற் பட்டுத் துன்புறும்படி இருந்த அடியேனை, நின் திருவடியாகிய மணமுள்ள தாமரை மலரை அடியேன் தலையின்மேல் வலிய வைத்தருளித் தடுத்தாண்டு கொண்ட நின் கருணைப் பெருக்கை எவ்வாறு உரைப்பேன்!

கரைகாணற்கு அரிதாதலின் ஆசை கடலாயிற்று. நேசம் - தலையளி. நேர்தல் - நுணுகுதல்; நேரிழை- நுண்ணிய வேலைப்பாடு அமைந்த ஆபரணம்; இங்கே அதனை அணிந்த தேவிக்கு ஆயிற்று. 32

இழைக்கும் வினைவழி யேஅடும்
காலன் எனைநடுங்க
அழைக்கும் பொழுதுவந் தஞ்சல்என்
பாய் அத்தர் சித்தம் எல்லாம்
குழைக்கும் களபக் குவிமுலை
யாமளைக் கோமளமே
உழைக்கும் பொழுதுன்னை யேஅன்னை
யேஎன்பன் ஓடிவந்தே.

(உரை) இறைவரது திருவுள்ளம் முழுதும் உருகும்படி, செய்யும் கலவைச் சந்தனத்தைப் பூசிய குவிந்த தனபாரங்களை உடைய யாமளையாகிய மெல்லியலே, அடியேன் செய்யும் பாவத்தின் விளைவாக அதுபற்றி என்னை வந்து கொல்லப் புகும் எமன் அடியேன் நடுங்கும்படி என்னை அழைக்கும் சமயத்தில் (யான் மிக வருந்துவேன் : அவ்வாறு) வருந்தும்பொழுது நின்பால் ஓடி வந்து நின்னையே, 'அன்னையே சரணம்' என்று புகலடைவேன்; அக்காலத்தில் என்பால் எழுந்தருளி, 'நீ அஞ்சற்க' என்று கூறி என்னைப் பாதுகாத்தருள வேண்டும்.

நாட்பார்த்து உழலும் கூற்றாதலின், இழைக்கின்ற வினையின் வழி இந்நாள் இவனைக் கொளற்குரிய நாளென்று