பக்கம்:அபிராமி அந்தாதி.pdf/60

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அபிராமி அந்தாதி

33

கருதிக் காலன் வருவான். அத்தர் சித்தம் குழைக்கும் நகில்: '"கொங்கை மலை கொண் டிறைவர் வலியநெஞ்சை, நடங்கொண்ட கொள்கை நலங்கொண்ட நாயகி" (42) என்பர் பின்; “பாக னகங்குழை வித்த பவித்ர பயோதரி" (தக்க, 74). யாமளைக் கோமளம்: “கோமள யாமளைக் கொம்பு” (7). கோமளம்-மெல்லியல், 'கோமலாகாரா', 'கோமலாங்கி' (லலிதா, 437, 721), அன்னையே என்பதனோடு சரணம் என்று ஒரு சொல்லை வருவித்து முடிக்க.

33

வந்தே சரணம் புகும் அடி
யாருக்கு வானுலகம்
தந்தே பரிவொடு தான் போய்
இருக்கும் சதுர்முகமும்
பைந்தேன் அலங்கற் பருமணி
ஆகமும் பாகமும்பொற்
செந்தேன் மலரும் அலர்கதிர்
ஞாயிறும் திங்களுமே.

(உரை) அபிராமி தன்பால் வந்து புகலடையும் அடியவர்களுக்குச் சொர்க்க லோக பதவியை அன்போடு தந்து, தான் பிரமதேவனுடைய நான்கு முகத்திலும், பசிய தேன் ஒழுகும் துழாய் மாலையும் பருத்த கவுத்துவ மணியும் அணிந்த திருமாலின் திருமார்பிலும், சிவபிரானது வாம பாகத்திலும், செந்தேன் சொரியும் பொற்றாமரை மலரிலும், பரவிய கிரணங்களையுடைய சூரியனிடத்திலும், சந்திரனிடத்திலும் போய் வீற்றிருப்பாள்.

போகப் பொருள்கள் பலவுடையதாகி விரிந்த வான் உலகத்தைத் தந்துவிட்டுத் தான் குறுகிய இடங்களில் போய் வீற்றிருப்பாளென்று நயம் பெறக் கூறினார்.

சதுர்முகம்: நான்முகன் நாவில் கலைமகளாக வீற்றிருப்பவளும் அம்பிகையே என்றபடி; "புண்டரிக வீட்டிற்