பக்கம்:அபிராமி அந்தாதி.pdf/83

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

அபிராமி அந்தாதிபாலினும் சொல்இனி யாய்பனி
மாமலர்ப் பாதம்வைக்க
மாலினும் தேவர் வணங்கநின்
றோன்கொன்றை வார்சடையின்
மேலினும் கீழ்நின்று வேதங்கள்
பாடும்மெய்ப் பீடம்ஒரு
நாலினும் சாலநன் றோஅடி
யேன்முடை நாய்த்தலையே

(உரை) பாலைக் காட்டிலும் இனிய சொல்லையுடைய தேவி, குளிர்ச்சியையுடைய தாமரை மலர் போன்ற நின் திருவடிகளை வைத்தருள, திருமாலும் மற்றும் உள்ள தேவர்களும் வணங்கும்படி நின்ற சிவபிரானது கொன்றைக் கண்ணியை அணிந்த நீண்ட சடையின் மேலிடத்தைக் காட்டிலும், கீழே நின்று வேதங்கள் பாடுகின்ற உண்மையான பிரணவ பீடங்கள் நான்கைக் காட்டிலும் அடியேனுடைய நாற்றமுடைய நாய்த்தலையைப் போன்ற தலையானது மிகவும் நன்றோ?

மால், இன்னும் தேவர் வணங்க. சிவபிரான் முடிக்கண் அம்பிகையின் திருவடி பதிதல்: 11, 35, குறிப்பு. நான்கு பீடம்: தூலப் பிரணவ பீடம், சூக்குமப் பிரணவ பீடம், காரணப் பிரணவ பீடம், மகாகாரணப் பிரணவ பீடம்; நான்கு வேதமாகிய நான்கு பீடங்களுமாம். நன்று - நன்மை யுடையது; தகுதியுடையது. முடை-புலால் நாற்றம்.

60நாயே னையும்இங் கொருபொரு
ளாக நயந்துவந்து
நீயே நினைவின்றி ஆண்டுகொண்
டாய்நின்னை உள்ளவண்ணம்
பேயேன் அறியும் அறிவுதந்
தாய்என்ன பேறுபெற்றேன்
தாயே மலைமக ளேசெங்கண்
மால்திருத் தங்கைச்சியே.