பக்கம்:அபிராமி அந்தாதி விளக்கம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அபிராமி பட்டர்

3



பித்தர்: ஏதோ துர்த்தேவதையை வழிபடுகிறவர்; கொஞ்சம் சோதிடம் தெரிந்தவர்" என்று சொன்னார்.

தீபாராதனை நடந்தது. வாத்தியங்கள் முழங்கின. அந்தப் பேரொலியினால் கண்ணை மூடியபடியே நின்று கொண்டிருந்தவர், சற்றே கண்ணை விழித்துச் சுற்று முற்றும் பார்த்தார். அவரைக் கவனித்த சரபோஜி மன்னர், "இன்று என்ன திதி?" என்று கேட்டார். நின்றவர் உடனே, "பெளர்ணமி" என்று சொன்னார், அங்கே இருந்தவர்கள் யாவரும் தமக்குள்ளே சிரித்துக் கொண்டார்கள். மன்னர் அவர் அறிவுக்குழப்பமுடைய பித்தர் என்றே முடிவு செய்தார்.

அரசர் தரிசனம் செய்து கொண்டு தம்முடைய இருப்பிடம் சென்றார். பெளர்ணமி என்று சொன்னவரும் தம்முடைய வீடு சென்றார். அவரைக் கண்டவர்கள், "நேற்றுத்தான் அமாவாசை, இன்று இவருக்குப் பெளர்ணமி வந்துவிட்டதாம்! என்று பரிகாசம் செய்தார்கள். அவர் ஒன்றும் பேசாமல் ஏதோ மயக்கத்தில் ஆழ்ந்தவர் போல வீடு போய்ச் சேர்ந்தார்.

அவர் அபிராமி பட்டர் என்னும் அந்தணர். வழிவழியாகத் தேவி உபாசனை செய்யும் குடும்பத்தில் பிறந்தவர். முறைப்படியே ஸ்ரீவித்தியா உபாசனை செய்கிறவர் அவர். சரியை, கிரியை என்னும் இரண்டு சோபானமும் கடந்து யோக நிலையில் யாமளையின் திருக்கோலத்தை ஆதார பீடங்களில் கண்டு கண்டு, இடைப்பட்ட கிரந்திகளைத் தாண்டிச் சென்று, பிரம்மரந்திரத்தில் சகசிரார கமலத்தில் ஒளிமயமாக எழுந்தருளியிருக்கும் லலிதாம்பிகையின் திருவருளின்பத்தில் திளைத்துப் பித்தரைப் போல ஆனந்தாதிசய வெறி மூண்டு உலவுகிறவர். அவருடைய அநுபவ நிலையை உணராதவர்கள், "இவர் ஏதோ துர்த்தேவதையை உபாசித்து அந்தணருக்கு மாறுபாடான