பள்ளிக்கூடம் தொடங்கி ஒரு வாரம் ஆயிற்று. தன் மாணவர்கள் எல்லாம் ஒருநாள் கூட குளிக்காமல் வருவதை அண்ணாவி மோப்பம் பிடித்தே அறிந்து கொண்டார். உடனே அவர் ஒரு கட்டளையிட்டார். நாள்தோறும் குளித்து, துவைத்த சீர் உடைகளையே அணிந்து வரவேண்டும் என்று கட்டாயமாகக் கூறி விட்டார்.
எல்லாக் குட்டிகளும் மறு நாள் காலையில் குளிப்பதற்காக காட்டுக் குளத்திற்கு சென்றன. முதன் முதலாகச் சென்ற எருமைக் கன்றுகள் குளத்தில் இறங்கித் தண்ணிரைக் கலக்கி விட்டன. ஆதலால் குளத்துநீர் முழுவதும் சேறும் சகதியும் ஆகிவிட்டது. பின்னால் வந்த மற்ற குட்டிகளெல்லாம் குளிக்காமல் திரும்பி விட்டன.
அக்கம் பக்கத்தில் வேறு குளம் ஒன்றும் கிடையாது. அவை என்ன செய்யும். குளத்து நீர் தெளிந்த பிறகுதான் குளிக்கலாம். அண்ணாவியிடம் சொல்லி மறுநாள் காலையில் மற்ற எல்லோரும் குளித்த பிறகு தான் எருமைக் கன்றுகள் குளிக்க வேண்டும் என்று ஆணை பெற்றன.
இதற்கிடையில் முயலம்மா பட்டணத்திற்குச் சென்று ஒரு மரத்தொட்டியும் சோப்புக் கட்டியும், புதிய சீர் உடைகளையும் வாங்கிக் கொண்டு வந்தது. பிறகு தன் குட்டிகளை அழைத்துக் கொண்டு நாலு கால் பாய்ச்சலில் மலையடிவாரத்திற்குச் சென்றது. அங்கிருந்த தெளிந்த நீரோடையில் தண்ணிர் பிடித்தது. மரத்தொட்டியில் நீரை நிரப்பி அதற்குள்