பக்கம்:அப்பம் தின்ற முயல்.pdf/49

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

47


“காட்டில் ஒரு நாகராசன் இருப்பதாகவும் அவனுக்கு வெள்ளிக் கிழமை தோறும் பால் வைத்தால் தீராத துன்பம் எல்லாம் தீரும்” என்றும் ஊருக்குள் கண்டவர்களிடம் எல்லாம் சொல்லி வந்தான்.

நாகப்பாம்பை ஒரு தெய்வம் போல நினைத்து அதற்கு பால் ஊற்றி வழிபட்டால் தங்கள் குறை எல்லாம் தீரும் என்று நம்பி பல மக்கள் முதலில் பார்ப்பனனிடம் பால் கொடுக்கத் தொடங்கினார்கள். பிறகு அவர்களே நேரில் சென்றும் பாம்புக்குப் பால் வார்க்கத் தொடங்கினார்கள்.

நாகப் பாம்பின் பக்தர் கூட்டம் பெருகியது. மூட மக்கள் கூடக் கூடப் பாம்புக்கு யோகம் அடித்தது. பல ஊர் மக்கள் சேர்ந்து அந்த இடத்தில் நாகப்பாம்புக்கு ஒரு கோயிலும் கட்டினார்கள். வேண்டுதல் செய்து கொண்டு பாலோடு முட்டை, கோழிக்குஞ்சு, முதலியவற்றையும் படைக்கத் தொடங்கினார்கள்.

நாகப்பாம்புக்கு மனிதர்களுடைய இந்தப் படையல்கள் மிகுதிப்பட மிகுதிப்பட, ஆணவமும், செருக்கும் தன்னை விடப் பெரியவர் யாரும் இல்லை என்ற நினைப்பும் கூடிவிட்டன.

தன்னுடைய பெருமையை நிலை நாட்டிக் கொள்வதற்காக அது தேவையில்லாமல் காட்டு விலங்குகளை அடிக்கடி தீண்டிக் கொன்று வந்தது. காட்டில் ஒவ்வொரு நாளும் அதன் தீய செயல்கள் மிகுந்து வந்தன.