பக்கம்:அப்பம் தின்ற முயல்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

51


“என்ன மேகங்களை எண்ணுகிறாயா?” என்று குரங்கு கேட்டது.

வானத்தில் சில கரிய மேகங்கள் காற்றினால் உந்தப்பட்டு ஒரு பக்கமாக ஓடிக் கொண்டிருந்தன. முயலின் கண்கள் அவற்றையே பார்த்துக் கொண்டிருந்தன. காற்றின் வேகம் சிறிது நேரத்தில் வலுவாயிற்று. காட்டு மரங்களெல்லாம் காற்றினால் அலைக்கப்பட்டன. மரக்கிளைகள் ஆடியபோது அவற்றிலிருந்து பழங்கள் உதிர்ந்து விழுந்தன. இவற்றை யெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த முயலின் முகத்தில் மகிழ்ச்சி மின்னியது.

சிறிது நேரத்தில் சடசடவென்று மழை பெய்யத் தொடங்கியது. உடனே முயலை வாரி அணைத்துக் கொண்டு மரத்தின் அடிப்பாகத்திற்கு ஓடியது குரங்கு. மழை விழாத இடத்திற்குச் சென்றதும் குரங்கு முயலைப் பார்த்துக் கேட்டது.

“கார் மேகத்தைக் கண்டால் மயிலுக்குத்தான் மகிழ்ச்சி உண்டாகும். நீ மகிழ்ச்சியடையக் காரணம் என்ன?”

“குரங்கண்ணா எனக்குத் திடீரென்று ஒரு கருத்துத் தோன்றியது. காற்றில் பழங்கள் உதிர்வதை நீ பார்த்தாய் அல்லவா? குரங்கண்ணா கவனித்துக்கேள். நீ தான் ஒரு பெரிய வேலை செய்யப் போகிறாய். உன்னை இந்தக் காட்டு விலங்குகளெல்லாம் வாழ்த்தப் போகின்றன.”