உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தென்னாடு 103

முதலிய விருதுகள் நடத்தினான். தன் அரண்மனைக்குப் புகழாபரணம் என்றும், மூன்று வேறுவேறான அரசிருக்கைகளுக்கு மழவராயன், கலிங்கராயன், முனையதரன் என்றும் பட்டயங்களில் பெருமைப்படப் பெயர் குறித்தான்.

இப்பட்டயங்கள் அவன் வீரப் பெருமைக்குச் சான்றுகள் என்பதில் ஐயமில்லை. ஏனென்றால், அவன் ஆட்சிக் காலமுழுவதும் சோழர் பாண்டியநாட்டைப் படையெடுக்கத் துணியவில்லை. அவன் ஆட்சி எல்லை மதுரை, திருநெல்வேலி, இராமநாதபுர மாவட்டங்கள் உட்பட்ட பாண்டி நாடேயானாலும், ஆட்சி வலிமையும் அரசியல் சூழ்ச்சி வலிமையும் அவனிடம் இருந்தன என்பதை இது காட்டுகிறது.

சோழன் மூன்றாம் குலோத்துங்கன் சோழரின் தளர்ச்சியும் பாண்டியரின் வளர்ச்சியும் கண்டு புழுங்கியிருந்தான் என்பதில் ஐயமில்லை. குலேசேகரனின் ஆட்சியிறுதிக் காலத்தில் கிடைத்த சிறுவெற்றிகளின் பின் அவனும் விருதுகளும் வீராபிஷேகங்களும் நடத்தித் தன்வலிமையை நிலைநாட்டத் தொடங்கினான். ஆனால், அடுத்த அரசன் காலத்திலேயே சோழப்பேரரசின் வீழ்ச்சி கண்ணுக்கு எட்டிற்று.


மாறவர்மன் சுந்தர பாண்டியன்

மாறவர்மன் சுந்தர பாண்டியன் (1217-1239) சோழப் பேரரசின் எல்லையைத் தன் எல்லையாக்க முற்பட்டான். தஞ்சையும் உறையூரையும் கைப்பற்றிச் சுற்றுப்புறங்களைச் சூறையாடிச் சோழபதி என்ற பட்டத்தையும் சூட்டிக் கொண்டான். சோழர் முடியை முதலில் கைக்கொண்டு, அதன்பின் அதனை நன்கொடையாகச் சோழனுக்கே கொடுத்து, அவன் மகனையே தனக்குப் பிணையமாகப் பெற்று ஆண்டான். இவற்றின் சின்னமாக அவன் 'சோணாடு கொண்டருளிய', 'சோணாடு வழங்கியருளிய', என்ற சிறப்பு அடைமொழிகளை ஏற்றான். முன் ஒரு சோழன் வீராபிஷேகம் நடத்திய அதே இடத்திலேயே அவன் இப்போது வீராபிஷேகம் நடத்தினான்.

சோணாட்டை வென்றும் பாண்டியன் அதைத் திருப்பிக் கொடுத்தது பெருந்தன்மையின் பயனாக மட்டுமன்று. தெற்கே பாண்டியரைப்போல வடக்கே ஹொய்சளர் வளர்ச்சியடைந்து