104 அப்பாத்துரையம் 11
வந்தனர். இரு புதிய அரசுகளும் சோழருடன் மணத்தொடர்பு கொண்டிருந்தனர். ஒருவர் வளர்ச்சியை ஒருவர் தடுக்கச் சோணாடு இருப்பது நலம் என்றே இருவரும் நினைத்தனர். ஹொய்சளரின் தலையீடு இம்முடிவை எளிதாக்கிற்று. அவர்கள் பாண்டியர் படையெடுப்பின்போது, வடசோழ நாட்டைக் கைப்பற்றியிருந்தனர். ஆனால், தெலுங்குச்சோடர் விரைவில் ஹொய்சௗரை எதிர்த்துத் தொண்டை மண்டலத்தைத் தாம் கைப்பற்றினர்.
1238-ல் பாண்டிய ஆட்சி எல்லையில் திருச்சிராப்பள்ளி, புதுக்கோட்டை மாவட்டங்கள் இணைந்திருந்தன.
மாறவர்மன் இரண்டாம் சுந்தரபாண்டியன் (1238-1253) வலிமை குன்றிய அரசனாயிருந்ததனால், ஹொய்சள மரபினராகிய அவன் உறவினர் நாட்டில் ஆதிக்கம் செலுத்தினர்.
பாண்டியப் பேரரசின் உச்சநிலை
சடையவர்மன் சுந்தரபாண்டியன் (1251-1270) காலத்தில் பாண்டிய அரசு பேரரசாகிய அதன் உச்சப் புகழை அடைந்தது. அவன் சோழரைத் தன் கீழ்ச் சிற்றரசர் ஆக்கினான். கொங்கு நாட்டை வென்றான். ஹொய்சளரை முறியடித்து ஒதுக்கினான். காஞ்சிபுரம் தெலுங்கு சோடரிடமிருந்து கைப்பற்றப்பட்டு, மதுரைக்கு அடுத்த இரண்டாந் தலைநகரமாயிற்று. சேர மன்னர் அவனுக்குத் திறை செலுத்தினர். இலங்கையை அவன் வென்று நேரடியாக ஆட்சி செலுத்தினான், மற்ற எந்தப் பேரரசரும் எளிதில் செய்திராத முறையில் அவன் ஒரு தனி மனிதனாக நின்று ஓர் ஆட்சிக்காலத்துக்குள் தன் வாள்வலியால் ஓர் உறுதி வாய்ந்த பேரரசை நிலைநாட்டினான். அதன் எல்லை முதலாம் பராந்தகன் சோழப்பேரரசின் அளவாயிருந்தது. ஆனால், அதன் வலிமையும் செல்வாக்கும் புகழும் தென்னாட்டில் எந்தப் பேரரசுக்கும் இல்லாத அளவில் இருந்தது.
சேமன் என்ற தலைவனின் வெல்லப்படாத கோட்டையாகிய கண்ணனூர்க் கொப்பத்தையும், வாணிகச் செல்வத்தில் சிறந்த கோப்பெருஞ்சிங்கன் நகராகிய சேந்தமங்கலத்தையும் அவன் வென்றான்.