உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தென்னாடு 65

பேரரசருடன் சேர்ந்து இம்முயற்சியில் பெருவெற்றிகள் கண்டான். ஆனால், அணை கடந்த வெள்ளம்போல், 3ஆம் நூற்றாண்டில் இந்த மக்கள் எழுச்சி பாய்ந்து வந்து பரந்தது.

தென்னாட்டின் வடமேற்கில் இருந்த பல குடிகள் இக்குடியெழுச்சியால் உந்தப்பட்டுத் தெற்கு நோக்கிப் புடைபெயர்ந்தனர். சேரநாடு வலிமை வாய்ந்த பேரரசாயிருந்தவரை தண்டகக் காட்டிலுள்ள இவ்வெழுச்சி தடைபட்டிருந்தது. ஆடுகோட்பாட்டுச் சேரலாதன் இப்பகுதியிலடைந்த வெற்றியை நாம் முன்பு கண்டோம். ஆயினும், விரைவில் கன்னட நாட்டெல்லையிலிருந்த களப்பிரர் என்ற ஒரு பண்படாக்குடி, தமிழகத்தின் மீதே சாய்ந்தது. இதனால் சேரசோழ நாடுகள் நிலைகுலைந்தன. பாண்டிநாடும் திடுமென நிலை கவிழ்ந்தது. மீண்டும் பாண்டிய அரசு தலைதூக்க இரண்டுமூன்று நூற்றாண்டுகள் ஆயின. சேரசோழ அரசுகள் தலையெடுக்கவே இன்னும் மூன்று நூற்றாண்டுகளுக்கு மேலாயின.

அளப்பரிய அதிராசரை அகலநீக்கி, அகலிடத்தைக் களப்பிரன் என்னும் கலியரசன் கைக்கொண்டான்... என்பது வேள்விக்குடிச் செப்பேடுகள் தரும் வாசகம். இக்களப்பிரர் படையெடுப்பின் பயனாகப் பாண்டியர் மரபு மட்டுமன்றி, பண்டைத் தமிழர் முச்சங்க வாழ்வும், முத்தமிழ் வாழ்வும் பழங்கதையாயின. ஈடும் எடுப்புமற்ற பழந்தமிழரின் தூய தென்னாட்டுப் பண்பாடும், சமூக சமயவாழ்வும் பண்படா அயலினப் பண்பாடுகளின் தாக்குதலால் தளர்ந்து நாளடைவில் அவற்றுடன் சரிசமமாகக் கலக்கத்தொடங்கிற்று.

வடக்கேயிருந்துவந்த குடிபெயர்ப்புக் குழப்பம் தென்னாட்டையும் சிறிது பாதித்ததுபோலவே; வடக்கே அதனாலேற்பட்ட பண்பாட்டுக் குழப்பமும் தென்னாட்டின் பண்பமைதியை ஓரளவு கலைத்தது. வேள்விக்குடிப் பட்டயம் களப்பிரர் புரளியையே கலியின் புரளி என்று குறிப்பிட்டது போல, வடபுலத்திலும் சகர், ஊணர் படையெடுப்புக்களே கலியுகத்தின் தொடக்கமாகக் கொள்ளப்பட்டது. இக்காலத்தில் எழுதித்தொடுக்கப்பட்ட பழங்கதைகளுடன் அக்கால வரலாறும் எதிர்கால உரையாகப் புராணங்களில் குறிப்பிடப்பட்டது. எதிர்காலக் கற்பனைகள் மூன்றாம் நூற்றாண்டுடன் முடிவதிலிருந்து, அவற்றின் காலம்