உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

66 அப்பாத்துரையம் 11

அந்நூற்றாண்டே என்பது தெற்றென விளங்குகிறது. இப்புராணங்களுடன் கலந்து பல அயலவர் சமய சமூகக்கோட்பாடுகள் தென்னாட்டு வாழ்வில் புகுந்து தென்னாட்டினர் சமூக அமைதியையும் குலைக்கத் தொடங்கின.

மூன்றாம் நூற்றாண்டின் மக்கட் புடைபெயர்ச்சி சிந்துவெளியை நிலையாகவும், தென்னாட்டின் மேற்குப் பகுதியைத் தற்காலிகமாகவும் தாக்கிற்று. அதே சமயம் அது கங்கை வெளியைத் தற்காலிகமாகவும் தென்னாட்டின் கீழ்ப்பகுதியை நிலையாகவும் தாக்காது விட்டிருந்தது. இதன் பயனாகக் கங்கைவெளியில் மூன்றாம் நூற்றாண்டிலிருந்து ஏழாம் நூற்றாண்டின் நடுப்பகுதிவரை குப்தப் பேரரசும், ஹர்ஷன் பேரரசும் நிலவ முடிந்தது. அதன்பின் சிந்துவெளியின் குழப்பம் கங்கை வெளியிலும் படர்ந்தது. ஆனால், தென்னாட்டில் ஆந்திரப் பேரரசும் சரிந்துவிட்டாலும் வேறு பல அரசுகள் புதிதாக எழ இடமிருந்தது.

தமிழகத்திலேயே அத்தகைய புதிய அரசு ஒன்று ஏற்பட்டது. அதுவே காஞ்சியைத் தலைநகராகக்கொண்ட பல்லவ அரசு. அது தமிழகத்தின் வடபகுதியைக் கைக்கொண்டு தமிழகம் தாண்டி விரைந்து வளரலாயிற்று.


பல்லவ மரபு

பல்லவர் பிறப்பைப்பற்றி வரலாற்றாசிரியர் பல கூறி மயங்குவதுண்டு. குடியெழுந்துவந்த வடபுலமாக்களுள், சகர், பார்த்தியர் ஆகியவர்களுடன, பல்லவம் அல்லது பாரசீக நாட்டு மக்களாகிய பல்லவர் என்ற இனத்தவரும் இருந்தனர். பல்லவர் அவர்களின் ஒரு பிரிவினரே என்பர் ஒரு சாரார். ஆனால், அவர்கள் ஆந்திரப் பேரரசிலேயே சிற்றரசாயிருந்தனர் என்று அறிகிறோம். அத்துடன் அவர்கள் கொடியின் சின்னம் ஏறத்தாழச் சோழர்களின் புலிக் கொடியாகவே இறுதிவரை இருந்தது. எனவே முன் பிரிவுகளில் குறிப்பிட்டபடி, பல்லவர் சோழருடன் தொடர்பு கொண்ட திரையரே யாவர். பல்லவர், திரையர் தொண்டைமான் ஆகிய சொற்கள் தமிழிலக்கியத்தில் ஒரு பொருட்சொற்கள் ஆகும். முதல் தொண்டைமானாக இளந்திரையன் குறிக்கப்பட்டான். அவனுக்கும் முதல்