தென்னாடு 67
பல்லவனுக்கும் உள்ள தொடர்பு விளங்காவிட்டாலும் இருவரும் தொடர்புடையவரல்லர் என்று கூற இடமில்லை.
'தோட்டி முதல் தொண்டைமான்வரை' என்ற மரபுரையில் தொண்டைமான் என்ற சொல் இன்றும் தமிழ் வழக்கில் உள்ளது.
காடு கொன்று தொண்டைக்காட்டை நாடாக்கிய கரிகாலன் செயலையும் தொண்டைமான் இளந்திரையன் புகழையும், தொண்டை நாட்டின் தமிழகப் பகுதியும் தெலுங்கு நாட்டுப் பகுதியும் இன்னும் நினைவில் கொண்டுள்ளன. கல்வெட்டுச் சான்றுகள் இவற்றை வலியுறுத்துகின்றன. சோழர் தொடர்பை இது எடுத்துக்காட்டுகிறது. வடபுலப் புடைபெயர்ச்சியால் ஆந்திரப்பேரரசும், களப்பிரரால் சோணாடும் நிலைகுலைந்த சமயம் பல்லவர் எளிதில் புதியஆட்சி பிறப்பித்துப் பரவியிருத்தல் இயல்பே.
இதே சமயம் திரையர்குடி மூலம் பல்லவர் ஆந்திரருடனும் தொடர்புடையவராயிருத்தல் வேண்டும். ஆந்திரரின் தலைநகரம் கோதாவரிக்கருகிலுள்ள அமராவதியாயினும் தொடக்கத்தில் அவர்கள் துங்கபத்திரைக்கருகிலுள்ள அண்டிரா ஆற்றங்கரையி லிருந்தவர்களே என்பது மேலே குறிக்கப்பட்டது.
மூன்றாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டுவரை தென்னாட்டு வரலாற்றில் பல்லவரே நடுநாயகம் வகிக்கின்றனர். அவர்கள் முதலில் ஆந்திரப் பேரரசின் எல்லையைக் கைக்கொள்ள முயன்று, வடக்கே புதிதாய் எழுந்த கடம்பர், சாளுக்கியர் ஆகியவர்களுடனும், மேற்கே கொங்கு அரசர் அல்லது மேலைக்கங்க மரபினருடனும் போராடினர். ஆறாம் நூற்றாண்டுக்குப்பின் அவர்கள் பாண்டியப் பேரரசுடன் பல தடவை மோதிக் கொண்டனர்.
பல்லவர்களில் முதல்வனான பப்பன் ஆந்திர அரசரின் வீழ்ச்சிக்காலத்தில் அவர்கள் கீழிருந்து ஆண்டு தென்பகுதியில் தன் ஆட்சிக்கொடியை உயர்த்தியவன். அவன் காலம் மூன்றாம் நூற்றாண்டின் தொடக்கம் என்று கருதப்படுகிறது. நான்காம் நூற்றாண்டின் முதற்பகுதியில் விஷ்ணுகோபன் காலத்தில் கங்கைவெளியின் பேரரசனான சமுத்திரகுப்தன் காஞ்சிமீது படையெடுத்ததாகக் கூறப்படுகிறது. இக்காலங்களில் பல்லவர்,