உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 11.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தென்னாடு 69

கொண்டான். பரியளம், மணிமங்கலம், சூரமாரம் ஆகிய இடங்களில் இவன் சாளுக்கியரை வென்று அவர்கள் தலைநகரமாகிய வாதாபியை அழித்துத் தரை மட்டமாக்கினான்.

வடநாட்டில் ஹர்ஷன் பேரரசனாக ஆண்ட காலம் இதுவே. சாளுக்கியரும் இச்சமயம் உச்சநிலை எய்தியிருந்தனர். சாளுக்கியப் பேரரசனாகிய இரண்டாம் புலிகேசியின் ஆட்சித் தொடக்கத்தில் ஹர்ஷன் தெற்கே படையெடுத்து வந்திருந்தான். அவனைப் புலிகேசி முறியடித்துப் பின் அரசியல் மதிநுட்பத்துடன் சமரசம் செய்து கொண்டான். ஆயினும் 642-ல் அவன் பல்லவரால் முறியடிக்கப்பட நேர்ந்தது.

வாதாபியை அழித்த பல்லவப் படைத்தலைவனான பரஞ்சோதியே, அறுபத்துமூன்று நாயன்மாரில் ஒருவரான சிறுத்தொண்டர். இவர் காலத்தில் தலைநாயன்மாருள் ஒருவரான திருநாவுக்கரசர் வயது சென்றவராகவும் திருஞானசம்பந்தர் இளைஞராகவும் இருந்தனர்.

சிந்து கங்கை வெளியின் பேரரசனை வென்ற தென்னாட்டுப் பேரரசன் புலிகேசி. அவனை வென்று, பல்லவர் தம் புகழின் உச்சியை அடைந்தனர்.

முடியிழந்த இலங்கையரசன் மானவர்மனுக்கு, நரசிம்மவர்மன் அடைக்கலம் அளித்திருந்தான்.

இரண்டாம் மகேந்திரவர்மன் இரண்டு ஆண்டுகளே ஆண்டான். அடுத்த அரசனாகிய பரமேசுவர போதவர்மன் 696வரை இருபது ஆண்டு ஆட்சி செலுத்தினான். இரண்டாம் புலிகேசிக்குப் பின் சாளுக்கிய அரசு மேலைச்சாளுக்கிய அரசு, கீழைச்சாளுக்கிய அரசு என இரண்டாக நிலவிற்று. இரண்டாம் மகேந்திரவர்மன், பரமேசுவர போதவர்மன் இருவர் காலத்திலும் மேலைச்சாளுக்கியருடன் பெரும்போர் நிகழ்ந்தது. சில சமயம் மேலைச்சாளுக்கிய அரசன் விக்கிரமாதித்தியனும் சில சமயம் பல்லவனும் வெற்றி கண்டனர். ஆனால், இறுதியில் விக்கிரமாதிதன் கையே மேலோங்கிற்று. அவன் தெற்கே திரும்பிப் பல்லவர் பாண்டியர் ஆகிய இரு பேரரசுகளுடனும் பெருவளநல்லூர், மங்களபுரம், மருதூர் ஆகிய இடங்களில் போர் செய்தான். பெருவளநல்லூரில் அவன் முறியுண்டு மீண்டான்.