70 அப்பாத்துரையம் 11
இரண்டாம் நரசிம்மவர்மன் 690 முதல் 715வரை ஆண்டான். தென்னாட்டின் தலைசிறந்த பழைய கலைப்படைப்புகளாகிய மாமல்லபுரம் அல்லது மகாபலிபுரத்திலுள்ள கடற்கரைச் சிற்பங்களையும் காஞ்சிபுரத்திலுள்ள கைலாசநாதர் கோயிலையும் கட்டியவன் இவனே.
இரண்டாம் நந்திவர்மன் (717-776) காலத்தில் சித்திரமாயன் என்ற இளவரசனுடன் அரசுரிமைக்கான உள்நாட்டுப்பூசல் ஏற்பட்டது. பாண்டியர் இதில் தலையிட்டதனால், பாண்டிய பல்லவப்போர் தொடங்கிற்று. சங்கரமங்கை, மண்ணைக்குடி, நெல்வேலி ஆகிய இடங்களில் கடும்போர்கள் பல நிகழ்ந்தன. நந்திவர்மனுக்கு அவன் படைத்தலைவனாகிய உதயசந்திரன் உதவினான். அவன் உதவியாலும் தஞ்சைப் பெரும்பிடுகு, முத்தரயர், அதிகைமான் ஆகியவர் உதவியால் நந்திவர்மன் அரசுரிமை இழக்காமல் காப்பாற்றப்பட்டான். சங்கரமங்கையில் இரு திறத்தவரும் வெற்றி கோரினர். மண்ணைக்குடியில் பல்லவன் வென்றான். ஆனால், பெண்ணாகடத்தில் மீண்டும் பாண்டியன் கை ஓங்கிற்று. இதற்கிடையே மேலைச்சாளுக்கிய அரசன் இரண்டாம் விக்கிரமாதித்தியனும் பல்லவர் நாட்டை அலைக்கழித்தான்.
பல்லவர் ஆட்சியின் சரிவு
பல்லவர் ஆட்சி இதுமுதல் சரியத்தொடங்கிற்று, நந்திவர்மன் (779-830) காலத்தில் தென்னாட்டின் வடமேற்கில் புதிதாய் எழுந்த ராஷ்டிரகூட மரபினர் பல்லவரைக் கீழ்ப்படுத்தினர். அடுத்த பல்லவ அரசன் மூன்றாம் நந்திவர்மன்; ராஷ்டிரகூடப் பேரரசன் முதலாம் அமோகவர்ஷன் புதல்வியாகிய கலையிற் சிறந்த சங்கையை மணந்து கொண்டான். பல்லவன் நிருபதுங்கன் காலம் மீண்டும் பாண்டியருடன் போரில் கழிந்தது. கங்க அரசர் இப்போது பல்லவருக்கு உதவி செய்து காத்தனர். கி.பி.829-ல் திருப்புறம்பயம் போரில் பல்லவன் வெற்றிபெற்றாலும், பேரரசு இதற்குள் சோர்வுற்றது. கடைசிப் பல்லவ அரசன் காலத்தில் புதிதாக அப்போதுதான் தலை எடுத்து வந்த சோழ மரபின் காவலன் முதலாம் ஆதித்தன் பல்லவனை அடக்கி அந்நாட்டையே கைக்கொண்டான்.