(216)
அப்பாத்துரையம் – 13
அளித்து முன்னேறப் பணித்தான். ஆனால் வாக்குறுதியை மட்டும் நம்பிப் பின்னணியையும் பக்க அணிகளையும் பாதுகாப்பில்லாமல் விட்டுவைத்துக் கொண்டு முன்னேற அவர்கள் தயங்கினர். இது அறிந்த இராமராயன் அவர்களுக்கு அமைதி தருவதற்காகப் பீசப்பூர் படைகள் இருந்த பக்கத்தில் இராட்சசி, தங்கிடி என்ற இரு ஊர்களிடையிலுள்ள தொலை ரு முழுவதையும் காக்கும்படி 12ஆயிரம் குதிரை வீரர்களையும், 20 ஆயிரம் காலாள் வீரரையும் நிறுத்தினான். விசயநகரப் படைகள் இப்போது முழு மனத்துடன் முன்னேறித் தாக்கின. இருபத்தேழு நாட்கள் வரை அகமது நகர், கோலகொண்டாப் படைகள் படிப்படியாகப் பின்வாங்க நேர்ந்தது. கடைசி 9 மணி நேரத்தில் எதிரிப் படைகள் சிதறுண்டு சீர்குலைந்து ஓடின. விசய நகரப் படைகள் போர்க்களத்திலிருந்து 20கல் தொ தாலை வரை அவர்களை விடாது துரத்திக் கொண்டு சென்று அழிவு செய்து மீண்டனர்.
வெற்றியில் மகிழ்ந்து விசயநகரப் படைகள் விழா வாட்டார்ந்தன.
சூழ்ச்சிக் களம்
முஸ்லிம் அரசுகளையெல்லாம் ஒருங்குதிரட்டி ஒன்று படுத்தி அதன் மூலம் விசய நகரத்தைத் தாக்கி ஒழித்து விடவே கோலகொண்டா அரசனும், அவன் தோழனான அகமது நகர் அரசனும் கங்கணம் கட்டிக் கொண்டிருந்தனர். இம்முயற்சியில் அவர்கள் ஒரு சிறிதும் வெற்றி பெறவில்லை. இராட்சசித் தங்கிடிப் போரின் முதற் பெரும்படியின் போக்கும் முடிவும் அவர்கள் ஏமாற்ற உணர்ச்சியையும், மனக்கசப்பையும், ஏக்கத்தையும் மனக் கலக்கத்தையும் பன்மடங்காக்கின. போர்க்களத்தில் புயலினும் பெரிதான அகப்புயல்கள் அவ்விரு முஸ்லிம் அரசர், உள்ளங் களிலும் குமுறிச் சுழன்றெழுந்தார்த்தன.
இருவரல்ல மூவர் அல்லது ஐவரே திரண்டெழுந்தாலும் இராமராயன் உயிருடன் இருக்கும் வரை விசய நகரத்தைப் போர்க்களத்தில் எதிர்த்து முறியடிப்பதென்பது முயற்கொம்பே என்று அவர்கள் கண்டனர். வலிமையைப் பெருக்குவதினும் சூழ்ச்சியைப் பெருக்குவது ஒன்றே அவர்களுக்கு அச்சமயம் நம்பிக்கைக்குரிய வழியாகத் தோன்றிற்று.