124
அப்பாத்துரையம் - 15
முற்பட்டனவோ, பிற்பட்டனவோ என்று தெளியாமலே, அவற்றைத் திருக்குறளுக்கு முன்னூல்கள் ஆக்கவும் அரும் பாடுபட்டுள்ளனர்! சமற்கிருத ஆராய்ச்சியில் வல்ல பேரறிஞர் பலர் அந்நூல்கள் திருக்குறளுக்குப் பிற்பட்டன என்று தெரிந்தும் பொது மக்களைக் குழப்புவதில் முனைந்துள்ளனர்.
வள்ளுவர் முப்பாலின் அமைப்பழகு தனிச் சிறப்புடையது. அஃது இன்பத்துடன் முடிவது. ஆனால், இல்லறத்துடன் தொடங்குவது. அது மட்டுமன்று. இன்பத்துப்பாலும் இல்லறத்துக்குரிய கற்பியலுடனேயே நிறைவுறுகிறது. இவ்வாறு முடிந்த இடத்தில் தொடங்கி, தொடங்கிய இடத்தில் சென்றிணையும் இம் முப்பாலேட்டுக்கு உண்மையில் ஒரு தொடக்கமும் கிடையாது, முடிவும் கிடையாது எனலாம். அஃது ஒரு வளையமாலை, ஒரு சக்கரம், ஓர் ஆழி! முப்பாலின் அற ஆழியாக அது சுழன்று சுழன்று வருவது. ஒரு தலைமுறை மண வாழ்விலிருந்து மறு தலைமுறை மண வாழ்வுக்குத் தாவி அலைபாய்ந்து செல்லும் மக்கள் வாழ்க்கையை அது படம் பிடித்துக் காட்டுவதாக அமைந்துள்ளது. இந்த அறஆழி
யக்கும் அந்தணனே இறைவன் அல்லது கடவுள். இந்நாளைய தமிழகம் - ஏன், இந்நாளைய உலகம் - இந்த அற ஆழியை இயக்கி அற ஆழி அந்தணன் பண்பறிய முடியாத காரணத்தாலேயே, பிற ஆழி நீந்த முடியாமல் தத்தளிக்கிறது என்னலாம்.
அறம் பெரிது. அறவழி நின்ற பொருள் அறத்தினும் அரிது. அறவழி பொருளும், பொருள் வழி இன்பமும் அமையின், அவ்வின்பம் பெரிதினும் பெரிது, அரிதினும் அரிது! அதுவே இன்பத்துள் இன்பம், இன்பங் கடந்த இன்பம், பேரின்பம்! ஏனெனில், அந்த இன்பம் மீட்டும் அறம், பொருள் வழி இன்பம் பெருக்கி, அற ஆழியாகிய இன்ப ஆழி உருட்டி, இன்பப் பயிர் வளர்க்கும். அதுவே கரையிலா இன்ப வெள்ளமாக, உலப்பிலா இன்பமாகப் பொங்கிப் புது வளம் தரும்.
வள்ளுவர் வழி நின்று இந்த இன்பத்துள் இன்பம்
காண்போமாக!