2. இலக்கிய இன்பம்
அழகுணர்ச்சியில் ஈடுபட்டு இன்பங் காண்பவன் கலையார்வலன், அழகு வடிவங்களைப் படைத்து, அவற்றின் மூலம் அவ்வின்பத்தில் பிறரையும் ஈடுபடுத்துபவன் கலைஞன். அக் கலைஞன் படைப்பே கலை.
வண்ணத்திலும் வடிவிலும் அழகுகாணும் ஓவியம், செதுக்குக்கலை, சித்திரம்; உருவில் அழகு வகுத்தமைக்கும் படிமக்கலை, சிற்பம்; இயக்கத்தில் அழகு நயங்கள் காட்டும் ஆடற்கலை; ஒலியியக்கத்தில் இனிமை கண்டு மருட்சியூட்டும்
சை; மொழியில் ஓசையினிமையும் கருத்தழகும் ஒருங்கே உருவாக்கிக் காட்டும் இலக்கியம்-இவை மனித இனம் கண்ட தலைசிறந்த கலைகள். இவற்றைச் சிறப்பாகக் கவின்கலைகள் என்கிறோம்.
வாழ்க்கையில் பயனுடைய ஒவ்வொரு செயலும் ஒரு கலைதான். இசை எப்படி ஒருகலையோ, அப்படியே இசைக் கருவிகள் செய்வதும் ஒரு கலையேயாகும். பின்னது இல்லா விட்டால், முன்னது வளர்ந்தோங்க முடியாது. அதுபோலவே உழவு, நெசவு ஆகிய தொழில்களுக்குரிய கருவிகள் செய்வதும் கலையே. வாணிகக் கருவியான நிறைகோல், இயல் நூல்களுக்குரிய நுண்கருவிகள் செய்வதும் கலையே. மேனி ஒப்பனைக்குரிய மணத் துகளும் வண்ணச் சாந்தும் நறு நெய்யும் சய்வது கலையன்று என்று எவரும் கூறமாட்டார்கள். இங்ஙனம் கலை, தொழில், அறிவுநூல், நாகரிகம் ஆகிய அனைத்துக்கும் இன்றியமையா அடிப்படையான கலைகள் எத்தனையோ உள்ளன. பயனில் சிறந்த இந்தக் கலைகளைக் காட்டிலும் மேலே கூறப்பட்ட கவின்கலைகள் மனித சமுதாயமெங்கும் உயர்வுபட மதித்துப் பேணப்படு வானேன்? தெய்வத் தன்மை பொருந்தியன வாகப் பாராட்டப்படுவானேன்? இதன் மறைதிறவு யாது?