126
அப்பாத்துரையம் - 15
பயனுணர்வு வேறு, அழகுணர்வு வேறு என்றும், பயன் நோக்காத கலையே தூய உயர்கலையாகிய கவின் கலை என்றும் கலைத்திறனாய்வாளர் பலர் கருதியுள்ளனர். கலை கலைக்காகவே என்ற வாசகம் இக்கருத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறது.
இக் கருத்து முற்றிலும் சரியன்று. ஆனால், முற்றிலும் தவறுமன்று.சொல்லளவில் இது மெய்ம்மை; ஆனால் சொல்பவர், கேட்பவர் கருதும் கருத்தளவில், அது முழுதுறழ் மெய்ம்மை காணார் கூறும் அரைகுறை மெய்ம்மையேயாகும்.
பயனோக்கிய கலைகளை நாம் தொழிற் கலைகள் -அல்லது ஆக்கக் கலைகள் எனலாம். அவை எதிர்பார்த்த பயனை அடைந்தவுடன் முற்றுப்பெற்று விடுகின்றன. அதற்குமேல் அவற்றுக்கு வளர்ச்சியில்லை. கவின் கலைகளோ பயன் நோக்கிய, அல்லது பயனை எதிர்பார்த்த கலைகளல்ல. ஆகவே, அவை என்றும் வளர்ந்துகொண்டே இருப்பன. மனித வாழ்க்கையும் பண்பாடும் நாகரிகமும் வளருந்தோறும், அவற்றுடன் இணைந்து இக் கலைகளும் வளர்கின்றன. இவற்றை உலகம் கவின்கலைகள் என்று அழைப்பதன் காரணம் இதுவே. ஆனால், இதுகொண்டு அவை பயன் தொடர்பற்ற கலைகள் என்று முடிவு கட்டிவிடுதல் தவறு. பயனை எதிர்நோக்காது இன்பம் மட்டுமே எதிர் நோக்கியவை அவை. அத்துடன் பயன் என்ற சொல்லால் நாம் குறிக்கும் 'புறப்பயன்' அவற்றினிடம் கிடையாது. அவை அகநாடிய கலைகள், அகமுகக் கலைகள்!
பயனோக்கிய கலைகள் ஒரு குறிப்பிட்ட பயனைக் கலைஞன் கருவி போன்ற ஒரு புறப்பயனை நாடுவன. ஆனால், கருவியைப் பயன்படுத்தும் கலைகள் நாடுவதோ இத்தகைய குறுகிய சிறு பயன்களை, கருவிகளை அன்று. அவை கலை நுகர்பவன், கலைஞன் ஆகிய இருவரையுமே -இருவரையும் உள்ளடக்கிய மனித இனவாழ்வின் வளத்தையே - பண்பாட்டையே நாடுவன. வாழ்வின் ஒரு சிறு கூறு அவற்றின் பயனன்று வாழ்க்கை முழுவதும் - வாழ்பவனும் - அவன் இனவாழ்வும் இனவளமும் அவற்றின் எல்லையற்ற பயன்கள் ஆகும்.
பயனோக்கிய கலைக்கும் கவின்கலைக்கும் உள்ள உயிர்வேறுபாடு இது மட்டுமன்று. பயன் நோக்காக் கலையே கவின்கலை என்று அரைகுறையாக உணரப்படும் வாசகத் திலேயே அவ் வேறுபாடு அடங்கியுள்ளது.
-
-