உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 15.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




4. புதுமை இன்பம்

இன்பம், இனிமை!

அகச்சுவையும் நாச்சுவையும் குறித்த இந்த இரண்டு சொற்களும் தமிழில் தொடர்புடையவையாகக் காணப்படுகின்றன. மனித வாழ்வின் அடிப்படைப் பாகுபாடுகளாகிய 'குடி', 'இனம்' என்பவைகூட இவற்றுடன் சொற்பொருள் தொடர்பு உடையனவோ என்று எண்ண இடமுண்டு. ஆனால், 'இன்பம்', 'இனிமை' ஆகியவற்றின் சொல்தொடர்பு தமிழ்க்கே சிறப்பானாலும், அவற்றின் சொற்பொருள் தொடர்பு கிட்டத்தட்ட எல்லா மனித ன மொழிகளுக்கும் பொதுவேயாகும்.

இன்பத்தை எல்லாரும் விரும்புவது போலவே, இனிமையையும் எல்லாரும் விரும்புவர். அதுபோலத் துன்பத்தை எல்லாரும் பலவேறு படியில்வைத்து வெறுப்பதுபோலவே, புளிப்பு, உவர்ப்பு, துவர்ப்பு, கசப்பு, கார்ப்பு ஆகிய மற்றச் சுவைகளைப் பல வகையாக, பல படியாகப் பெரும்பாலார் வெறுப்பர். ஆயினும், துன்பத்தில் இன்பச் சுவை காண்பவர் ல்லாமலில்லை. அதுபோலவே புளிப்பு முதலிய மற்றச் சுவைகளில் ஈடுபட்டு அவற்றை விரும்புபவரையும் நாம் காணலாம்.

விஞ்சிய சுவை இனிமையே என்றுதான் தமிழரும் ஏனையோரும் கொண்டிருத்தல் வேண்டும். இது இயல்பே. ஆனால், இன்பத்துக்கு இன்பமும் இன்ப உறுதியும் தருபவை மற்றச் சுவைகள் என்பதையும் அவர்கள் அறிந்தே அறுசுவை உண்டி வகுத்துச் சென்றனராதல் வேண்டும்.

இனிய பொருள்கள் மேலீடான இன்பத்தைப் போலவே எளிதில் கெடுவன. ஏனைய சுவைகளோ கெடாநலம் மிக்கன. இதனை நகை நயத்துடனும் அறிவு நயத்துடனும் ‘திருவளர்த் தான்' கதை ஒன்று நமக்குக் காட்டுகின்றது.