142
அப்பாத்துரையம் - 15
'அரும்பொருள் ஒன்றை ஒவ்வொருவரும் தேர்ந்து கொணர்க!' என்று பணித்திருந்தான், திருநாட்டு மன்னன்! யார் சிறப்பு மிக்க அரும்பொருள் தேர்கின்றனர் என்று காண அவன் விரும்பியிருந்தான்.
பொன்மணிப் பேழைகளை அருமுயற்சியுடன் தேடிப் பெற்று அவற்றை ஏந்தி வந்தனர் சிலர்.
மயிலும் குயிலும், அன்னமும் மானும், குதிரையும் வருந்தித் தேடி இட்டுக்கொண்டு வந்தனர் சிலர்.
வண்ண மலர்கள், வகை வகையான சுவை தரும் கனிகள், வாய் ஊறவைக்கும் சிற்றுண்டிகள் ஆகியன கொணர்ந்தனர் வேறு சிலர்.
ஆனால் திருவளர்த்தான் எதுவும் கொண்டுவந்ததாகத் தெரியவில்லை. அது கண்டு அவையோரும் பொது மக்களும் வியப்புற்றனர்.
அரும்பொருள்கள் ஒவ்வொன்றையும் கண்டு கண்டு அவற்றைத் தேர்ந்தெடுத்தோர் அருந்திறம் எண்ணி எண்ணி இறும்பூ தெய்தினான் மன்னன். எல்லாப் பொருள்களையும் பார்வையிட்டபின், வெறுங் கையுடன் நின்ற திருவளர்த்தானை ஏறிட்டு நோக்கினான்.
‘உன் திருகுவிழி தவிர உனக்கு வேறு அரும்பொருள் ஒன்றும் கிடைக்கவில்லையா, திரு!' என்று குறும்பு நகையுடன் கேட்டான்.
குறும்பே உருவாக என்றும் விளங்கிய திருவளர்த்தான் முகத்தில் அச்சமயம் குறும்பின் சாயல் எதுவுமே காணவில்லை. அவன் எல்லாரையும் போலவே பணிவன்புடன் மன்னனை வணங்கி, தன் இடுப்பிலிருந்து ஒரு சின்னஞ் சிறு கந்தல் மூட்டையை எடுத்தான்.
மன்னன் திருவடிப்பக்கமே ஆர அமரக் குந்தியிருந்த வண்ணம் அவன் அம் மூட்டையை அவிழ்க்கத் தொடங்கினான்.
ஏளனத்துடன் அவனை நோக்கிய சிலர் அவன் செயல் கண்டு வியப்புற்றனர். பலர் அதன் பொருள் தெரியாமல் மலைப்புற்றனர்.