இன்பத்துள் இன்பம்
159
மாண்டொழிந்த ஒரு பழைய உயிரின ஊழி கடந்து புத்தம் புதிய உயிரின ஊழியிலும் நீடித்து வாழ்ந்துள்ளன. அந்த ஈரூழி, ஈருலக வாழ்வின் சின்னமாகவே அவை இருபிறப் புயிர்களாய் நம் யிரூழியில் இயங்குகின்றன.
பெரும்பாலான நடுப்படி உயர்படி உயிரினங்களில் நான்காவதாகவும் ஒரு துயில்நிலை உண்டு. அது தலைமுறைகளுக் கிடையே நிகழ்வது. இதையே நடுப்படி உயிரினங்களில் முட்டைநிலை என்றும். உயர்படி உயிரினங்களில் கருநிலை என்றும் கூறுகிறோம். இதுவும் மெய்ம்மையில் செறிதுயில் நிலையோடு ஒப்பானதே. ஆனால், செறிதுயில் ஒரு தனி வகை உயிரினத்தின் ஓர் ஊழியின் செறிவு மட்டுமே. முட்டைநிலை, கருநிலை ஆகிய இவையோ அவ்வவ் இனவகை அடைந்த பொது உயிரின வளர்ச்சி முழுவதையும் தன்னகம் செறியக்கொண்ட நிலை ஆகும். மனித இனம் அன்னையின் கருவில் கழிக்கும் பத்து மாதங்கள் இங்ஙனம் ஓரறிவுயிர் முதல் ஆறறிவுயிரீறாக மனித இனம் அடைந்துள்ள உயிரின வளர்ச்சிப் பேரூழியான பன்னூறாயிரங்கோடி ஆண்டு வளர்ச்சியின் மணிச்செறிவே யாகும். இக்காரணங்களால் நாம் இதனை மணித்துயில் நிலை என்று கூறலாம்.
திருவள்ளுவர் இவ்வெல்லாக் கூறுகளையும் உய்த்துணர்ந் திருந்தார் என்று கருத இடமுண்டு. அவரது மற்றொரு குறட்பா இத்திசையில் நம்மைச் சிந்திக்க வைப்பதாய் அமைந்துள்ளது.
‘குடம்பை தனித்தொழியப் புள்பறந் தற்றே உடம்போடு உயிரிடை நட்பு’
இதுவே அத்தெய்வத் திருவாசகம். குடம்பை என்பதற்குப் பரிமேலழகர் முட்டை என்று பொருளுரைத்தார். ஆனால், மணக்குடவர் அதற்குக் கூடு என்றே பொருள் கொண்டார். திருவள்ளுவர் இத்தமிழ்ச் சொல்லின் இரு பொருள்களை யுமே மனத்துட் கொண்டு. உடலுக்கு முட்டையை உவமையாகவும், முட்டையைக் கூட்டுக்கு உவமையாகவும் உவமை மேல் உவமையான இரண்டு உவமையாகவே குறித்தனரோ என்று நாம் ஐயுற வேண்டியிருக்கிறது. அவ்வாறு கொண்டால், அக்கருத்துத் திருவளர்த்தான் கதை தரும் ‘வெங்காய உருவத்தையே' நமக்கு நினைவூட்டவல்லது.