உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 19.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செந்தமிழ்ச் செல்வம்

29

ஓடிப் பல கிளையாறுகளுடன் இணைவதே இவற்றின் தனிப்பட்ட உயிர் நீர் வளத்துக்குக் காரணம். இவற்றுக்கடுத்தபடி வைகையும் பாலாறும் காடற்ற நடுநிலத்தின் மீது ஓடுவதால் ஊற்று வளமே உடையன. காவிரியும் வைகையும் தாமிர வருணியுமே சோழ பாண்டிய அரசுகளின் நிலைக்களமாகவும் அவற்றின் நாகரிகப் பண்ணைகளாகவும் இயங்கி வந்துள்ளன. திருவாங்கூர் தமிழகத்திலுள்ள பெரியாற்று அணைத்திட்டத் தால் வைகை துணைவளம் பெற்றுள்ளது; பெற்று வருகிறது.

பண்டைத் தமிழகம் உலகிலேயே சிறந்த துறைமுகங்களை உடையதாய் இருந்தது. கடற்கரைப் பட்டினங்களும் உள்நாட்டு நகர்களும் சிறந்திருந்ததால், அஃது இன்றைய கிராம இந்தியாவைப்போல் இராமல், மேல் நாடுகளைப் போல நகர வாழ்க்கைச் சிறப்பும் உயர்தர வாழ்க்கைச் சிறப்பும் உடையதாய் இருந்தது. கடல் வாணிகம், உள்நாட்டு வாணிகம், செய்தொழில் ஆகியவற்றிலும் வளமிக்கதாய் உலகில் செல்வவளத்தில் முதன்மை பெற்றிருந்தது. ஆனால், நீராவிக் கப்பல் வந்தபின் அதற்குப் போதிய ஆழ்கடலும் இயற்கைத் துறைமுகமும் தமிழகத்தில் குறைந்துள்ளன. சென்னை வெள்ளையராட்சியில் பெருந் துறைமுகமாகியுள்ளது.சிறு துறைமுகப்பட்டினங்களில் தூத்துக்குடியும் புதுச்சேரியும் சென்னைக்கடுத்தபடி ஏற்றுமதி இறக்குமதிச் சிறப்பு அடைந்துள்ளன. இவையன்றிக் காரைக்கால், நாகப்பட்டினம், தனுஷ்கோடி ஆகிய துறை நகரங்களும், மரக் காணம், சதுரங்கப்பட்டினம், மாமல்லபுரம், கூடலூர், தரங்கம் பாடி, காயல் பட்டினம், குலசேகரன் பட்டினம், குளச்சல் ஆகிய படகுத் துறைகளும் தமிழகத்தில் உள்ளன. இவற்றுட் பலவும் இவற்றையடுத்த இடங்களும் பண்டு உலகின் பெரிய வாணிகத் துறைகளாக நிலவியவையேயாகும்.

கடல்வளமாகிய முத்து, சங்கு, சிப்பி, மீன், பவளம், உப்பு; மலைவளமாகிய சந்தனம், அகில், தேக்கு, ஒண்மணிகள்; காட்டுவளமாகிய தேன், அரக்கு; அடி நில வளமாகிய தங்கம், இரும்பு; ஆற்று நில வளமாகிய நெற்பயிர், கரும்பு, அவுரி, கோரை, புன்செய்ப் பயிர்கள், பருத்தி; இவற்றை யொட்டிய உழவுத் தொழில், முத்தெடுத்தல், கடல் வாணிகம், சுரங்கத் தொழில், சர்க்கரைத் தொழில், சாயத் தொழில், பொன்வினை, மணிவினை,