உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 19.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44

அப்பாத்துரையம் - 19

இப் பகுதியில் கவிஞர் முதல் நூற்றாண்டு முதல் பன்னிரண்டாம் நூற்றாண்டுவரை உள்ள ஆயிரம் ஆண்டுச் சோழ வரலாற்றைக் கூறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பராந்தக சோழன் மதுரையையும் இலங்கையையும் வென்றது, இராசஇராசன் சேர நாட்டையும் உதகமண்டலத் தையும் வென்றது, மண்ணைப் போரால் சோழர் கங்கை நாட்டையும் கடாரம்நாட்டையும் வென்றது, இராசேந்திரனும் அவன் பின்னோரும் காம்பிலி நாட்டில் வெற்றித் தூண் நட்டது, கொப்பம் போரில் வடதிசை வென்றது ஆகியவற்றை இங்கே விரித்துரைத்து, இறுதியில் துங்கபத்திரை, கிருஷ்ணா ஆறுகள் கூடுமிடமாகிய கூடல்சங்கமத்தில் குலோத்துங்கன் வென்றதுவரை கவிஞர் பாடி முடிக்கிறார்.

“குந்தளரைக் கூடற் சங்கமத்து வென்ற

கோன்அபயன் குவலியங் காத்தளித்த பின்னை இந்தநிலக் குலப்பாவை இவன்பால் சேர

என்னதவம் செய்திருந்தாள் என்னத் தோன்றும்!”

குலோத்துங்கன் பிறந்த உடனே உலகம் அடைந்த நிலையைக் காளி தேவி பேய்களுக்குக் கூறுவதாகக் கவிஞர் நான்காம் பகுதியில் கூறுகிறார்.

உதியர் அல்லது சேரர் பணிந்துவிட்டார்களாம்! செழியர் அல்லது பாண்டியர் கடலில் போய் விழுந்து விட்டார்களாம்!

“கழலில் அடைந்தனர் உதியர்! கடலில் அடைந்தனர் செழியர்! பரிசில் சுமந்தனர் கவிகள்!

பகடு சுமந்தன திறைகள்! அரசு சுமந்தன இறைகள்! அவனி சுமந்தன புயமும்!

சோழ நாட்டுக் கவிஞர்கள் குலோத்துங்கன் பரிசில்களைச் சுமந்து சென்றனர். வெளிநாட்டரசர் திறைகளை யானைகள் சுமந்து வந்தன. சிற்றரசர்கள் கப்பத்தைச் சுமந்துகொண்டு வந்தனர். அதேசமயம் குலோத்துங்கன் தோள்கள் உலகத்தைச் சுமந்தன என்று கவிஞர் அழகுபடக் கூறுகிறார்.