உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 19.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செந்தமிழ்ச் செல்வம்

51

சங்ககாலத்தில் ஒட்டக்கூத்தர், சயங்கொண்டாரை ஒத்த புலவர் ஒருவரல்லர். மிகப் பலர். அவர்கள் பாடிய அரசர்களும் மிகப் பலர்- முடியரசர்களும் குடியரசர்களும் அவ்வப்போது ஒன்றிரண்டு பேரரசர்களும் இருந்த காலம் அது. புலவர்களும் கவிச்சக்கரவர்த்திகளாய் இல்லை. அரசர்களும் மிகப் பெரும் பாலும் புவிச்சக்கரவர்த்திகளாய் அமைந்ததில்லை. இருவர் படியும் மிகத் தாழ்ந்திருந்தது-ஆனால், இது தன்மை தாழ்ந்ததனாலல்ல-உயர்ந்ததனாலேயே! புவிச் சக்கரவர்த்திகளின் தன்மைகளையுடைய தேசியக் கவிச்சக்கரவர்த்திகளும் அப்படியே! பொன்னே ஏராளமாகக் கொட்டிக் கிடக்கும் இடத்தில் பொன்னுக்கு மதிப்புக் குறைந்ததுபோல, சங்க காலத்தில் அரசியல் உயர்பண்பும், கலையின் உயர்பண்பும் கொட்டிக் கிடந்தன.

அரசரை, முடியரசரை, வீரரை மக்களைப் பாடிய புலவர்களை உலகின் எந்த மொழியின் இலக்கியத்தையும்விட நிறைவளமாகத் தமிழ்ச் சங்க இலக்கியக் கலைக் கடலில் காணலாம். ஆனால், அதன் கலை வளத்தை, பண்பு வளத்தைச் சுட்டிக்காட்டும் வேறு சில கூறுகளும் உண்டு. அரசரைப் பாடிய புலவரேபோல் புலவரைப்பாடிய புலவரும், அரசரைப் பாடிய அரசரும், புலவரைப் பாடிய அரசரும் உண்டு. இதில் கடைசி வரிசையைச் சேர்ந்த ஓர் அரசனே தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன். அவனைப் பாடிய பெரும் புலவர் மாங்குடிமருதனார். அவர் அவனைப் பாடிய மதுரைக் காஞ்சியே தமிழிலக்கியத்தின் இமயமலையாகிய சங்க இலக்கியத்திலும் உச்ச உயர்ச்சி மய்யமாகிய எவரெஸ்ட் போன்ற சிகரங்களுள் ஒன்று என்று கூறத்தக்கது,

அரசரைப் பாடிய புலவர் இலக்கியத்தில் அஃது உலகிலேயே ஒப்புயர்வற்ற ஒரு சின்னஞ்சிறு பெருங்காவியம். அதனுடன் போட்டியிடவல்ல மற்ற ஒரே ஒரு சிறு பெருங்காவியம் அதே நெடுஞ்செழியனை நக்கீரர் பாடிய நெடுநல் வாடையே. ஆனால், அதனைப் பாடிய புலவர்க்குக் கிடைத்த பரிசோ வேறு. உலகில் எந்தப் புலவர்க்கும் எங்கும் கிட்டாத பரிசு. அவர் அப்பேரரசனைப் பாடு முன்பே-அவன் தலையாலங் கானத்துப் பெரும் போரால் தமிழகத்திலும் வரலாற்றிலும் பண்டைக்கால