உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 19.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 -

அப்பாத்துரையம் - 19

மன்னர் கால ஆராய்ச்சி,பத்துப்பாட்டு ஆராய்ச்சி ஆகியவையும் சென்னைக் கிறித்துவக் கல்லூரியின் மாத வெளியீட்டிலே முதலில் வெளிவந்தன.

தனித் தமிழின் தந்தை, தமிழ் இயக்கத்தின் வழிகாட்டி என்று புகழப்படத் தக்கவர் மறைமலையடிகள். அவர் பேராசிரியர் சுந்தரம் பிள்ளை எழுப்பிய தமிழார்வத்தின் ஒரு கிளைப் பிழம்பேயாவர். ஒரே ஆசிரியரிடம் இருவரும் படித்த தொடர்பை முன்னிட்டும், அடிகளின் சொல்லாண்மை, அறிவாண்மை கண்டும், பேராசிரியர் அவரைத் திருவனந்த புரத்துக்கு அழைப்பித்து ஆதரவு தந்தார். சிலகாலம் அடிகளைத் திருவாங்கூரிலேயே பள்ளியின் தமிழாசிரியராக அமர்வித்தபின், அவரைச் சென்னைக் கிறித்துவக் கல்லூரித் தமிழாசிரியராக்க உதவினார். அடிகளும் பேராசிரியருடைய மரபும் கருத்தும் பேணி, அவர் புகழை வளர்க்கும் இருபதாம் நூற்றாண்டுத் தூதராக விளங்கினார். நாட்டை மறவாத நல்லறிஞரை நாடு மறவாமல் பேணிய பெருமை இந் நூற்றாண்டின் தொடக்கத்தில் அடிகளுக்கே உரியது.

ஒரு

மனோன்மணீய நாடகம் ஷேக்ஸ்பியரைப் பின்பற்றி இயற்றப்பட்ட ஒரு தலைசிறந்த தமிழ் நாடகம். பண்டை நாடகக் காப்பியமான சிலப்பதிகாரம் ஒரு சேர இளவரசனாலேயே பாடப்பட்டது. அடுத்த ஒரு தமிழ் நாடகக் காப்பியம் ரண்டாயிரம் ஆண்டுகளுக்கப்பால் அதே சேரநாட்டில் வாழ்ந்த பேராசிரியர் இயற்றிய மனோன்மணீயமேயாகும். தமிழ்க்கு முன்னது எத்துணைப் பழம் பெருமையும் அருமையும் உடையதோ, அதே அளவுக்கு மனோண்மணீயம் புதுப்பெருமையும் அருமையும் உடையது. ஏனெனில், சிலப்பதிகாரம் அழிந்த முத்தமிழ்க்குச் சான்று. மனோன்மணீயம் வரவிருக்கும் புதிய முத்தமிழின் சின்னம்.

அறிஞரும் கலைஞரும் அருமையாக வழங்கிய திராவிடம் என்னும் சொல்லையும், மொழிப் பெயராக மட்டும் வழங்கிய தமிழ் என்னும் சொல்லையும் தமிழினத் தேசியக் கொடிகளாக வானளாவ உயர்த்திய பெருமை மனோன் மணீயம் ஆசிரியர்க்கே உரியது. நூலினகத்தும் ஆசிரியர் தமிழகப்பற்று, நாஞ்சில் நாட்டு வருணனை, தாம்பிரவருணிப் புகழ் விருதுரைகள் ஆகியவை