உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 19.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. ஆசியாவின் வீர ஜோதி

தென் ஆசியா முழுவதும் புகழொளி பரப்பிய தென்னாட்டுப் பேரரசுகள் பல. உலகின் பேரரசுகளுக்குள்ளே இத் தென்னாட்டுப் பேரரசுகளுக்குத் தனிப் பெருமையும், தனிச் சிறப்பும் உண்டு. ஆயினும், பல வகைகளிலும் தென்னாட்டுப் பேரரசுகளிடையேகூடத் தலைசிறந்த, பீடும் புகழும் உடையது சோழப் பேரரசு தான் என்று கூறலாம்.

சோழ அரசரின் ஒரு மண்டலாதிபதி இலங்கையையும் அதன் மாகடல் தீவுகளையும் ஆண்டான். ஒரு மண்டலாதிபதி விந்தியத்துக்கு வடக்கே இமயம் வரை ஆண்டான். மற்றொரு மண்டலாதிபதி சுமத்ராவிலுள்ள பாலம்பாங் தலைநகரிலிருந்து கொண்டு கடாரம், அதாவது தென்கிழக்காசியா முழுவதையும் ஆண்டான்.

கடலுலகும் நிலவுலகும் ஆண்ட இந்தச் சோழப் பரம்பரைக்கு ஈடாக உலகில் எந்தப் பேரரசுப் பரம்பரையையும் கூற முடியாது. வீரத்திலும், ஆட்சித் திறமையிலும், அரசியல் மதிநுட்பத்திலும் கலையார்வத்திலும் சோழர் மரபில் தொடர்ச்சியாக வந்த பெரும் புகழரசர்களைப் போன்ற ஒரு கூட்டணியை நாம் எந்த நாட்டு வரலாற்றிலும் காண்பதற்கில்லை. அரபிக் கதைகளிலும், இசுலாமிய வரலாற்றிலும், இந்துஸ்தானத்தின் பேரரசுகள் என்று குறிக்கப்படுகிறவர்கள் இந்தச் சோழ அரசர்களேயாவர். அந்நாளில் அவர்களுடன் சரிசமமாக நின்று ஒப்பந்தம் செய்து கொள்ளும் பெருமை உலகிலேயே ஒரு பேரரசுக்குத்தான் இருந்தது. அதுவே சீனப் பேரரசு. உலகின் செல்வம் முழுவதையும் புகழ் முழுவதையும் அந் நாளில் இந்த இரண்டு பேரரசுகளுமே பங்கிட்டுக்கொண்டன.

பெருஞ் சோழரிடையே, தலைசிறந்தவர் யார் என்று ஒரு கேள்வி கேட்டால், வரலாற்றாசிரியர்கள் எளிதில் விடை கூற