உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 19.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. வள்ளுவன் கண்ட உலகம்

திருக்குறள் தமிழர்க்கு ஓர் அணிகலன். அஃது தமிழ் நாட்டின் புகழ்க் கொடி தமிழ்ப் பண்பின் உரைகல்லும் அதுவே. ஆனால், அந்தத் திருக்குறளில் நாடு, பண்பு என்ற பொதுச் சொற்களைத்தான் காணலாம். தமிழ் என்ற சொல்லைக் காணமுடியாது.தமிழ் நாடு; தமிழ்ப் பண்பு என்ற தொடர்களும் இடம் பெறவில்லை.

சொல்லையே வழங்காமல், சொற்பொருளை எப்படி

நாட்டினார்?

அவர் தமிழ் மொழியையே மொழியாகக் கண்டார். தமிழ் நாட்டையே உலகமாகக் கண்டார். தமிழ்ப் பண்பையே மனிதப் பண்பாகத் தீட்டினார். அவர் தனிச் சிறப்புக்குக் காரணம் இந்தப் பொதுமைதான். அதன் பயனாகவே, அவர் புகழ் இன்று மொழி கடந்துள்ளது.அவர் கருத்துகள் நாடு நடந்து மதிக்கப்படு கின்றன. அவர் வகுத்த வாழ்க்கைத் திட்டம் காலம் கடந்து இன்றும் சிறப்புடைய தாய் இருக்கிறது, வருங்காலத்திலும் அவர் குறிக்கோள் காலங் கடந்து நிற்பது உறுதி. இயற்கை கடந்து நிற்கக்கூடும் என்றுகூடக் கூறலாம்.

பொதுமை அருமையானது. மிக மிக அருமையானது. ஆனால், அஃது எப்போதும் விரும்பத்தக்கதாய் இராது. அது பல மரம்கண்ட தச்சர் கதையாய் அமைந்துவிடக்கூடும். ஒரு தச்சன் பல மரம் கண்டானாம். ஆனால், ஒன்றுகூட வெட்ட நேரமில்லையாம்! அதுபோலப் பலர் கருத்தறிந்தவர் தமக்கென ஒரு கருத்தற்றவராய் இருந்துவிடலாம். பல மொழி கற்றவர் தம் மொழி அறியாதவராயிருக்கலாம். அகலம் நன்று. ஆனால், ஆழமில்லாப் பண்பு அதன் நலனைக் கெடுத்துவிடும்.