(100
புயலுடன் போராட்டம்
அப்பாத்துரையம் - 24
இரவில்தான் இனி கடல் தாழும். காலையில்தான் புறப்பட முடியும். அதுவரை ஓய்வு கொள்வதென்று அவன் பாய்க் கப்பலிலேயே படுத்து உறங்கினான்.
நள்ளிரவு இருக்கும். ஏதோ ஒன்று உடலை நெட்டித் தள்ளிற்று. எழுந்து பார்த்தான். கதிரவனொளியுமில்லை. நிலவொளி, விண்மீனொளியு மில்லை. ஆயினும் எங்கும் ஒரே நீலநிற ஒளி படர்ந்திருந்தது. அது கடல் நீரிலிருந்தே வந்ததென்று கண்டான். பட்டை பட்டையான ஒளிக் கீற்றுக்களும் அவற்றினிடையே நிழற்பிழம்புகளும் நீர்ப் பரப்பில் தள தளவென்று பிறங்கின. இது கனவா, நனவா என்ற ஐயத்துடன் கில்லியட் மீண்டும் மீண்டும் கண்களைத் துடைத்துக்கொண்டு பார்த்தான்.நனவுதான். ஆனால் அது ஒரு கோர நனவு என்பதை அவன் விரைவில் உணர்ந்தான்.
கடலின் இவ்வொளி அடுத்துவரும் பெரும் புயலுக்கு அறிகுறி என்று அவன் அறிவான்.
கடலின் ஆற்றல் பெரிது. ஆனால் காற்றின் ஆற்றல் அதனினும் பெரிது. இரண்டும் சந்திக்கும் பரப்பிலே மனிதன் மிதப்பது இந்நிலையை நெருக்கடி ஆக்கிற்று. ஆனால் கடல், காற்று இரண்டும் கரையை அடுத்தே முழு உயிர் பெறுகின்றன. கரை பாறையாயிருந்தால், டூவ்ரே போன்ற இடுக்கமான பாறையாயிருந்தால் நீரும் காற்றும் சேர்ந்த ஆற்றல் இன்னும் பன்மடங்காகப் பெருக்கம் அடையும். நேற்றுவரை இந்தப்புயல் வந்திருந்தால், இந்த ஆற்றலுக்கு டியூராண்டுதான் ஆளாயிருக்கும். அவன் பாறையின் குகைக்குள் பாதுகாப்பாக இருந்து தப்பிப் பிழைத்திருக்கலாம். பாய்க்கப்பல் மனிதப்பாறையின் பாதுகாப் பிலும் இருந்திருக்கும். ஆனால் அவன் இரு பாறைகளின் இடுக்கில் பாய்க்கப்பலுடனும் டியூராண்டுடனும் அகப்பட்ட இந்த நேரம் பார்த்து, அது தன்னை அழிக்கத் திட்டமிட்டிருக்கிறது என்று அவன் கண்டான்.
காற்றின் ஆற்றல் நீர்ப்பரப்பிலேயே பெருங் கொந்தளிப்பு உண்டு பண்ணும். நீர்ப் பரப்பிலும் எல்லா அலைகளும் குறுகிய பாறையிடுக்கில் நுழையும்போதுதான் நீர் பேயாட்டமாடும்.