உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 24.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




பிறமொழி இலக்கிய விருந்து -2

137

கவனத்துக்குரிய செய்திகளாயின. அப் போக்கு வரவுகளை நாளடைவில் அவன் ஒருமுகப்பட்ட தன் கருத்தாற்றலால் அகக்கண் பார்வையாலேயே ஆய்ந்து வரத்தொடங்கினான். அவ்வளவு தொலைவிலிருந்து அவன் அவள் அசைவினால் அவள் உள்ள நிலை, வாழ்க்கைத் தொடர்புகள், இயல்புகள் யாவும் அறிய முடிந்தது.

ஜக்ரிஸின் மாளிகை ஆற்றோரமாகவே இருந்தது. இம்பாரின் அறையிலுள்ள பலகணி ஆற்றை நோக்கியே அமைக்கப்பட்டிருந்தது. ஓலா ஒரு சனிக்கிழமையன்று படகில் ஏறி ஆற்றைக் கடந்தான். ஆற்றுப் பக்கத்தில் பாறையும் சுவரும் செங்குத்தாகவும் மிக உயரமாகவுமே இருந்தன. ஆனால் அவன் துணிந்து இரண்டிலும் தாவியேறினான். பலகணியில் அவன் அடுத்தடுத்துப் பலதடவை தட்டினான்.

இம்பார் உள்ளே இருந்தாளென்பதை அவன் அறிவான். ஆனால் கதவு தட்டியதுகேட்டு யாரும் வந்து திறக்கவில்லை. அவள் தூங்கியிருக்கக் கூடும் என்று நினைத்து அவன் திரும்பி வந்துவிட்டான். ஆனால் அடுத்த சனிக்கிழமையும் அதற்கடுத்த சனிக்கிழமையும் அவன் இது போலவே தொடர்ந்து சென்று பலகணிக் கதவைத் தட்டினான். மூன்றாவது தடவை அவன் முன்கூட்டியே பற்றுக் குறடு, சுத்தி, உளி ஆகியவற்றுடன் சென்றிருந் தான். கதவு தட்டியும், யாரும் திறக்காதது கண்டு, அவன் உளியால் பலகணிக் கதவின் ஆணியைச் சுற்றிச் சீவி, குறட்டால் ஆணியைப் பேர்க்க முனைந்தான். உள்ளே யாவும் கவனித்துக்கொண்டிருந்த இம்பார் கடுஞ்சினத்துடன் பலகணி திறந்து, “யாரது! உனக்கு இங்கே என்ன வேலை! மதிப்பாகப் போய்விடுகிறாயா அல்லது.." என்று அதட்டினாள்.

ஓலா புன்னகை தவழ அவளைப் பேச்சிலிழுக்க முயன்றும், அவள் கண்டிப்பாக "நீ ஆறுகடந்து வரவேண்டாம்; நான் எச்சரிக்கிறேன், போ" என்றாள்.

அவன் பேசாது திரும்பிவிட்டான். ஆனால் வாரந்தோறும் தே போன்ற காதல் படையெடுப்புத் தொடர்ந்தது.

இம்பாரின் சீற்றம், கண்டிப்பு, வசையுரை எதுவும் ஓலாவின் முயற்சியைத் தடுக்கவில்லை. அவன் காதல் பற்றிய பேச்சு எங்கும் பரந்தது.