பிறமொழி இலக்கிய விருந்து -2
185
வெள்ளெலியின் நிலையையே அது நினைப்பூட்டிற்று. உள்ளே நுழைந்ததும் அக்காட்டுக்குரல் எழுப்பியது பாவ்லோவ்ஸ்கியே என்பதை வெல்ச்சானினாவ் கண்டான். அக்குழந்தை யார் என்று அறியத் துடித்தான்.
அதுதான் தன் குழந்தை- நடல்யா விட்டுப்போன குழந்தை என்று பாவ்லோவ்ஸ்கி அறிமுகப்படுத்தினான். ஒரு நொடியில் நடல்யா மீது தான் கொண்ட ஐயம் தவறு என்பதை வெல்ச்சானினாவ் உணர்ந்தான். அதுவே தான் வரும்போது பிறந்ததாக நடல்யா கூறிய தன் குழந்தை என்பதை அவன் இப்போது கண்டுகொண்டான். அது தன் குழந்தை! அது இப்போது தாயற்றுத் துடிக்கிறது! அவன் உடலும் உள்ளமும் துடித்தன.
"லிஸா! இது அம்மாவின் நண்பர். என் நண்பர்.உனக்குச் சிற்றப்பா.அழுகையை நிறுத்தி அவருக்கு வணக்கம் செய்!” என்று மெதுவாகக் கூறினான் பாவ்லோவ்ஸ்கி.
லிஸா பாவ்லோவ்ஸ்கியைப் பார்த்து நடுநடுங்கிக் கொண்டே வெல்ச்சானினாவுக்கு வணக்கம் செலுத்தினாள். அந்தச் சிறிய முகமும் கண்களும் நடல்யாவை அப்படியே உரித்து வைத்தாற்போலிருந்தது. ஆனால் முகம் விளறிப் போயிருந்தது- உடல் புயலில் ஆடும் சருகுபோல் நடுங்கிற்று. பாவ்லோவ்ஸ்கி என்ன காரணத்தாலோ தாய் மீதுள்ள பகைமை முழுவதையும் இந்தத் தாயில்லாப் பிள்ளையிடமே காட்டத் தொடங்கி யிருந்தான் என்று தெரிந்தது.
வேலைக்காரி, வீட்டுக்காரி ஆகியவர்கள் மூலம் பாவ்லோவ்ஸ்கி குழந்தையிடம் தந்தை என்ற பாசத்தோடு நடந்துகொள்ளவில்லை என்றும்; வேண்டுமென்றே குடித்து விட்டுவந்து, தாயைப்பற்றி அக்குழந்தை முன் அவதூறாகப் பேசி அதை வைதும், அடித்தும் பேயாட்டமாடி வந்தான் என்றும் தெரியவந்தது. இந்தப் பேயின் கையிலிருந்து குழந்தையை மீட்க அவன் துடித்தான்.
வெல்ச்சானினாவிடம் மட்டும் பாவ்லோவ்ஸ்கி இன்னும் நல்லவனாக, ஒப்பற்ற நண்பனான, அன்பு கனியும் தந்தையாகவே நடிக்க முயன்று கொண்டிருந்தான்.