3. மெல்லியலாள்
டாஸ்டோவ்ஸ்கி
ஆ! வாடா மலர் வாடிக் கிடக்கிறது. வாடிவிட்டதென்று காட்ட எந்தச் சின்னமும் காணவில்லை. 'இன்று காண்கிறேன்; இனிக் காண முடியாது' என்ற எண்ணம் ஒன்றுதான் அது வாடியதற்கான அறிகுறி! அது ஆடவில்லை, அசங்கவில்லை. ஆனால் என் உள்ளம் துடியாய்த் துடிக்கிறது. அது வந்த விதம், இருந்த விதம், போன விதம் எல்லாம் என் மனத் திரையிலே ஒன்றையொன்று தொடர்ந்து பாய்கின்றன. அதை வார்த்து உருவாக்க நான் ஒரு சிறுகதை எழுத்தாளனல்ல; ஆனால் அது தானாக வளர்ந்து உருவாகி என்னை அத்தகைய எழுத்தாளனாக்கியுள்ளது
அவள் முதன் முதலில் என் வாழ்க்கையில் புகுந்த நாளை நான் என்றும் மறக்க முடியவில்லை. அல்லி மலர் போல நீண்டு ஒடுங்கிய ஒல்லி உருவம். கசிந்த மொழி, ஒசிந்த நடை, வெளியுலகில் மசிந்து மிகுதி பழகாத குனிந்து நாணிய கன்னல் பார்வை! அவள் கையில் அவசர அவசரமாகத் துலக்கிக் கொண்டு வரப்பட்ட ஒரு பழய வீட்டு விளக்கு.
அடகுக் கடை வைத்திருப்பவன் வேறொருவனாயிருந்தால், அடகு வைக்க வருபவர் வேறொரு ஆளாயிருந்தால், அத்தகைய பொருள் கடைக்குள் ஏறவும் செய்யாது; கொண்டு வந்தவர் கைக்குப் பணமும் போயிருக்காது. ஏனெனில் பொன், வெள்ளி தவிர எதுவும் அடகுக்காகப் பெறும் வழக்கம் அடகுக் கடைக்காரருக்குக் கிடையாது. ஆனால் நான் கொடுக்கும் அழகுடன் கொடுத்தேன்; அவள் வாங்கும் அழகுடன் வாங்கினாள். மற்றவர்களைப் போல அவள் பேரம் பேசுவது கிடையாது பணத்தைக் கை நீட்டி வாங்குவதற்கே அவள் கை கூசியது போலத் தோன்றிற்று.