உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 24.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




228 ||

அப்பாத்துரையம் - 24

உறவை மிகுதிப்படுத்தத் தலைவன் முனைந்தான். அதே சமயம் அவன் உள்ளத்திலே ஒரு பேரவா மலர்ந்தது. தான் பகைத்தும், தன் நலமே பெரிதெனப் பேணித் தன்னைக் கடுகளவும் பகைக்காது தன் நன்மைக்கெனவே உழைத்து வரும் யூமினோசுகேக்கும் அவன் ஏதாவது ஒரு கைம்மாறு செய்யக் கருதினான். இரண்டையும் இணைக்கத் தலைவன் ஒரு புதுவழி வகுத்தான். மியூகியையும் கோமஸாவாவையும் மணவினையில் பிணைக்க முடியுமானால், அது இருவருக்கும் ஏற்ற நலமாகும் என்று அவன் திட்டமிட்டான்.

கோமஸாவா ஜிராஸா எமோன் என்பது உண்மையில் அஸோ ஜிரோவின் மறுபெயரேயாகும். அவன் நாட்டுக் கிளர்ச்சியை அடக்கி வெற்றியும் புகழும் பெற்றான். அத்துடன் மன்னன் கேளிக்கை வாழ்க்கையிலீடுபட்டிருப்பதைத் தவிர்க்க வேறுவகை காணாமல், அவன் இன்ப வாழ்க்கைக்குரிய காதற்கிழத்திக்கே நயம்பட நல்ல பல அறிவுரைகள் கூறி அவள் ஒத்துழைப்புடன் தலைவனின் போக்கையும் மாற்றியமைத்துப் பேரும் பெருமையும் பெற்றான். இதற்குப் பின் தலைவனும் மக்களும் அவனைப் பெரிதும் பாராட்டிப் போற்றினர். புகழின் எல்லையிலே நின்ற அஸோஜிரோ, இந்தப் புதுப் பெயரும், அதற்குரிய பட்டம் பதவிகளும் பெற்றான்.

"மியூகியை மணஞ்செய்து கொள்வீரா?" என்ற வினா, “அமுதுண்ண வருவீரா?” என்று அழைப்பது போலிருந்தது.இந்த அழைப்பை அவன் தயக்கமின்றி ஏற்றுக் கொண்டதில் வியப்பில்லை. அவன் உடனடி ஒப்புதல் கேட்டுத் தலைவன் மகிழ்ந்தான். கோமஸாவாவின் உடற்கட்டும் எடுப்பான தோற்றமும், அப்பழுக்கற்ற நாகரிகப் பண்பாடுகளும் யூமினோ சுகேயின் மனத்தைக் காந்தம்போல் கவர்ந்து விட்டன. அவரும் ஆர்வத்துடன் தலைவனின் விருப்பத்துக்கு இணங்கினார். எப்போது வீட்டுக்கு விரைவோம். இவ்வின்பச் செய்தியை மனைவிக்குக் கூறுவோம் என்றே நினைத்துக் கொண்டிருந்தார் யூமினோசுகே. அவர் வீடு சென்றதும் முதல் செய்தியாக மிசாவாவிடம் இதைத் தெரிவித்தார்.

மிசாவா தான் சொல்ல வேண்டுமென்றிருந்த மியூகியின் காதற் செய்தியைச் சொல்ல இப்போது வாய்ப்பில்லாமல் போய்விட்டது. அதே சமயம் அஸோஜிரோ தான் கோமஸாவா