பிறமொழி இலக்கிய விருந்து -2
229
என்பது அறியாமல், தாயும் மகளும் எல்லையில்லாத் துன்பத்திற்கு இரையாயினர். தந்தையோ தான் விரும்பி ஏற்ற ஒப்பந்தத்திலிருந்து விலக முடியாது என்று கண்டிப்பாகக் கூறி விட்டார். மிசாவா தழுதழுத்த குரலில், "என் செல்வமே, எப்படியும் நீ உன் மனதை மாற்றிக் கொள்வதுதான் நல்லது. கோமஸாவாவைக் கண்டால் உனக்குப் பிடித்துப் போகும் என்று மியூகியைத் தேற்றினாள்.
அந்தோ! கோமஸாவாவை மியூகி கண்டால் உண்மையிலேயே அவளுக்குப் பிடித்துப் போயிருக்கும் என்பது உறுதி. உண்மையில் ஒருவேளை அவள் உள்ளம் மகிழ்ச்சிக் கடலிலேயே ஆழ்ந்திருக்கும். ஆனால் கோமஸாவாவே, அஸோஜிரோ என்பதை அறியாத நிலையில் அந்த வாய்ப்பும் ஏற்பட இடமில்லாது போய்விட்டது. எனவே தனக்கு மிக மிக அருகில் வர இருந்த காதல் வெற்றியை அறியாது மியூகி அதிலிருந்து தப்பியோடும் எண்ணத்துடன் தாய் தந்தையருக்கு ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டு இரவோடிரவாக வீட்டை விட்டு வெளியேறி மறைந்து விட்டாள்.
அவள் கடிதம் இது:
"அன்புள்ளம் வாய்ந்த அருமை அம்மா, அப்பா இருவருக்கும் துன்பச் சேற்றில் அழுந்தித் தவிக்கும் மியூகி வணக்கத்துடன் வரைந்து கொண்டது.
"மியாகி அஸோஜிரோ என்ற இளைஞரை நான் காதலித்து அவரையே மணந்துகொள்ள உறுதி செய்து கொண்டிருக்கிறேன். அம்மா இதை அறிவாள்.
"தாய் தந்தையர் மனங் கோணாதபடி பெண்கள் நடந்து கொள்ள வேண்டியதுதான்.நானும் இதுவரை அவ்வாறு நடந்து கொள்ளக் கனவிலும் தவறியதில்லை. ஆனால் இந்த ஒரு செய்தியில் நான் உங்கள் மனங் கோணாதவாறு நடந்துகொள்ள முடியாதவளாயிருக்கிறேன். ஆகவே எனக்கிருக்கும் ஒரே வழி சாவின் மூலம் தங்கள் கட்டளையையும் என் உறுதியையும் ஒருங்கே காப்பாற்றிக் கொள்வதுதான்.
"கற்புடைய மங்கையர் ஒரே ஒரு தடவைதான் காதலிக்க முடியும். இரண்டாந்தடவை காதலித்தல் என்பதோ காதலித்த