6. செயல் வெற்றி
மனிதன் வெற்றிகள் யாவும், அவன் தோல்விகள் யாவும், அவன் கருத்தின் கருவில் பிறப்பனவே; அக்கருவின் முதிர்ச்சியாக, அவற்றின் பயன் விளைவாக அவை இயங்குவனவே. ஒழுங்கமைதி யுடைய உலகில் ஒழுங்கமைதி கெடுக்கும் எல்லாப் பொருள்களும் அழிவுறுவது உறுதி. இது உலக ஒழுங்கமைதியின் நெறிமுறை. எல்லையற்ற உலகின் ஒழுங்கமைதிக்கு இயற்கையாற்றல் அல்லது கடவுள் பொறுப்பு வகிப்பதுபோல, மனித எல்லையிலுள்ள உலகின் ஒழுங்கமைதிக்குத் தனி மனிதனே பொறுப்புள்ளவனாக வேண்டும். அவன் சூழலிலும் சூழலுக்கும் அவனுக்கும் இடையே உள்ள தொடர்பிலும் அவனாக ஒழுங்கமைதி வகுக்கத் தவறினால், சூழலை இயக்கும் ஆற்றலாகிய அவன் உயிர்ப்பண்பை அவன் இழக்கிறான். இயற்கையே நேரடியாக அவன் சூழலின் ஒழுங்கமைதியை ஏற்று, அவனுடைய இயக்குமாற்றலாகிய உயிர்ப்பண்பை ஒழிக்கிறது. இயற்கையின் அழிக்கும குமாற்றல் இங்ஙனம் தன் அழிவாற்றலாகாமல் தனிமனிதன் தடுக்கவேண்டு மானால், அவன்தன் உயிராற்றலை, அதாவது இயக்கு மாற்றலை யும் படைக்குமாற்றலையும் பயன்படுத்தி, இயற்கையின் இயக்கு மாற்றலிலும் ஒழுங்கமைதியிலும் தனக்குரிய பொறுப்பையும் பங்கையும் சரிவர ஏற்க வேண்டும்.
மனித ஆற்றலுக்கும் இயற்கை ஆற்றல் அல்லது கடவுட் பேராற்றலுக்கும் உள்ள வேற்றுமை ஒன்று தான். இயற்கைக்குப் படைத்தல், இயக்குதல், அழித்தல் ஆகிய மூன்று திறங்கள் உண்டு. மனிதனுக்குப் படைத்தல், இயக்குதல் ஆகிய இரு திறங்கள்தான் உண்டு. அழிக்கும் திறம் கிடையாது; அழியும் திறன் மட்டும் உண்டு. ஆனால் இது இயற்கையின் அழித்தல் திறத்தின் மறுகூறு மட்டுமே. இதைத் தடுக்க வேண்டுமானால், இயக்கும் திறனையும் அதன் மூலம் படைக்கும் திறனையும் அவன் வளர்க்கலாம். இதை