காதல் மயக்கம்
டு
93
அவன் தன்காரியம் முடிக்க வகை தேடிக்கொண்டு கோமான் மீது அவர்கள் வெறுப்பை இன்னும் கிளறிவிட வகை தேடினான்.
கோமான் எப்போதும் திறந்த வெளித்திண்ணையிலேயே படுத்து உறங்குவது வழக்கம். அச்சமயம் மாதவன் அவன் கழுத்தை அரிந்து புதைத்து விடுவதென்றும் அதன்பின் கோகிலாவை அவன் மணந்து கொள்ளுவதென்றும் மூவரும் கூடிப்பேசினர்.
மாதவனை ஓரிரவு ஏவிவிட்டு உள்ளே மற்ற இருவரும் தாம் விரும்பிய 'நற்செய்தி’யை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று 'ஐயோ, கொலை, கொலை' என்ற குரல் கேட்டது. இனிச் செத்து விடுவான் என்று அவர்கள் விளக்கெடுத்துக் கொண்டு வெளியில் வந்தனர். ஆனால் இருட்டில் மாதவன் குறிதவறி வெட்டியதால் கழுத்தில் ஆழ்ந்த காயம் ஏற்பட்டதேயன்றி உயிர்போகும் நிலையில்லை என்று கண்டனர். கொலையாளியைத் தேடும் சாக்குடன் வெளியே ஒளிந்துநின்ற மாதவனை அவர்கள் தேடிக் கண்டு ‘அடப் பைத்தியமே, இன்னும் அது சாகவில்லை; போய்க் குறை வேலையைத் துணிகரமாக முடி'என்று அனுப்பினர். இத்தடவை வெட்டு இன்னும் ஆழமாய்ப் பாய்ந்தது. கோமான் இப்போதும் 'அடபாவிகளா, பொறுமையாகக் கொலை செய்யப் பார்த்துக் கொண்டா இருக்கிறீர்கள்' என்று கதறி னான். ஆயினும் கொஞ்ச நேரத்தில் குரல் மங்கி ஓய்ந்துவிட்டது. ‘ஆ, ஒருவகையில் ஒழிந்தது' என்றனர் இருவரும்.
ஆனால் 'கொலை' என்ற எண்ணம் இனித்தஅளவு கோகிலாவுக்கு அச்செயல் இனிக்கவில்லை. மாதவன் பரிசுகளுக்காகவே அவனிடம் பாசங்கொண்ட அவளுக்கு அவன் பரிசு இனி வேண்டியதில்லை என்ற எண்ணம் விடுதலை யளிக்கவே, அவனிடம் அவளுக்கு வெறுப்பு ஏற்பட்டது. 'நமக்காக மாமனைக் கொன்றவன் இனி வேறு யாருக்காவது நம்மையும் கொல்லத்தானே செய்வான்' என்றது அவள் உள்ளம்.
எனினும் கோமான் இப்போதும் செத்துவிடவில்லை. அவர்கள் வந்தபோது அவன் இரத்த வெள்ளத்திடையே தலையைப் பிடித்துக்கொண்டு சாய்ந்து கிடந்தான். தயங்கிய குரலில் 'ஆ, என்னைக் கொல்ல உதவுமளவுக்கு நான் உங்களுக்கு என்ன செய்தேன்' என்று அவன் உருக்கமாகக் கூறி அழுதான்.