காதல் மயக்கம்
103
பத்மா அடுத்த நாள் ஹரிஹரனுக்கு வழிச்செலவு தந்து “வெற்றியுடன் மீள்க. ஆனால் வெற்றியிலும் தோல்வியிலும் உங்கள் கடமையும் இங்கே, உரிமையும் இங்கே. எந்த இன்பம் வரினும் நான்வந்து பங்குகொள்வேன். எந்தத் துன்பமாயினும் வந்து பங்கு தருக” என்றனுப்பினாள்.
"வெற்றிக்காயினும் சரி, தோல்விக்காயினும் சரி, இனி ஆயிரம் யானை வலிவுடன் போராடுவேன்" என்று புறப் பட்டான் ஹரிஹரன்.
ஆனால் தோல்விகளும் ஆயிரம் யானை வலிவுடன் அவனைப்பார்த்துக் கொக்கரித்தன.
‘ஆராம் கடை’ப் பூட்டு விற்பனைக் குழாத்தின் பேராள் ஒருவரிடம் துணைப்பேராள் (சப். ஏஜெண்டு) வேலை ஒன்று விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது. மாதம் 50 ரூபாய் சம்பளமும் ஏராளமான கழிவூதியமும் தருவதாக உறுதி கூறப்பட்டிருந்தது. இருநூறு ரூபாய் உறுதிப்பணக்கோரிக்கை ஒன்று தவிர அதில் கவர்ச்சிக்கு ஒன்றும் குறைவில்லை. அதுகண்டு ஹரிஹரன் மாமனார் அத்தொகையையும் தரமுன்வந்தார். பருத்தி புடவை யாய்க் காய்த்த தென்ற எண்ணத்துடன் அவன் வேலையிலீடு பட்டான். கழிவூதிய மட்டுமே மாதம் நூறு ரூபாய்க்குக் குறையாமல் கிடைக்கும் என்று பேராள் கூறிய ஊக்கமொழி கேட்டு அவன் பின்னும் உவகை கொண்டான்.
பேர்போன ஆராம்கடைப்பூட்டுக்களின் மூட்டை ஒன்றைப் பேராள் அவனிடம் தந்து மிகவும் பெருமிதத்தோற்றத் துடன் அதனைக் கையாளும் முறைகளைக் கற்பித்தான். "இதை எனக்குக் கற்பது கடினமாயிருக்கிறதே. ஏழைமக்கள் இதனைக் கற்றுப் பயன்படுத்துவது எவ்வாறோ" என்று ஹரிஹரன் கேட்டான். பேராள் சீற்றமும் வியப்பும் கொண்டு “பேர்போன வாணிகத்துறை வல்லுனர்கள் பார்க்கப் பெருமைப்படும் ஆராம்கடைப் பூட்டின் அருமையை நீ என்ன கண்டாய்! இதை வெளியில் சொன்னால் எவன் உனக்குத்துணைப் பேராண்மை தந்தான் என்று அலைக்கழிப்பார்கள்” என்றான்.