108
அப்பாத்துரையம் - 25
பத்மா: தோல்வி படிப்பினையாவது என்றால், தோல்வி தரும் இடத்தை விலக்கிப் புதுவது நாடவேண்டும் என்று பொருள். மேலும் அரசியல் நிலையம், தனிநிலையம், வாணிகம், தொழில் என்று நீங்கள் நாடிய போக்கே காட்டவில்லையா, வெற்றி எத்திசையில் இருக்கிறது என்பதை!
ஹரி: எனக்கு நீ கூறுவது புரியவில்லையே. விளங்கச் சொல்.
பத்மா: பெரிய இடத்திலிருந்து தொடங்கிச் சிறிய இடம் நாடினீர்கள். அரசியலின் பொறுப்பிலிருந்து தனி மனிதர் பொறுப்பை நாடினீர்கள். பிறரைச்சார்ந்து நிலை வாழ்வதி லிருந்து படிப்படியாகத் தன்னைச் சார்ந்து வாழும் நிலைக்கு வந்துள்ளீர்கள்.இனி நீங்கள் முயலவேண்டிய இடம் ஒன்றே. நம் குடும்பத் தொழிலுக்கு நாம் ஒரு ஆளைத் தேட வேண்டும். அன்னியர் அதில் உண்மையாய் உழைக்க மாட்டார்கள். அன்னியரிடம் நாம் உழைக்க விரும்புகிறோம். எவ்வளவு உண்மையாக உழைத்தாலும் அவர்கள் சொட்டுக் கூறுவார்கள். இந்நிலையில் என்ன செய்வது என்று விளங்கவில்லையா?
ஹரிஹரன்: ஆம், நம் தொழிலையே நாம் செய்வது நல்லது. நம்மிடம் என்ன தொழிலிருக்கிறது. குடும்பம் நடத்தும் தொழிலுக்கு நீ சம்பளம் தரப்போகிறாயா?
பத்மா: ஆம் தரப்போகிறேன். என் தந்தையின் குடும்ப நிலங்கள் சீரழிகின்றன. தாங்களே அதனை மேற்பார்த்து நடத்துங்கள். நான் கூடவந்து உழைக்கிறேன். பிள்ளை வளரும் வளர்ச்சியுடன் செல்வமும் வளரும்.
ஹரிஹரன் சொல்லொணா மகிழ்ச்சி யடைந்தான். உண்மையில் அவன் பிள்ளை வளரும் வேகத்தை விட அவர்கள் செல்வம் வளரலாயிற்று. ஏனெனில் தங்கள் தலைவர் வீட்டுப் பெண்ணும் மருமகனுமாக வந்து உழைப்பது கண்ட வேலை யாட்கள் அன்பும் ஊக்கமும் மிகுந்து ஒத்துழைத்தனர்.
பத்மாவின் தந்தை தன் நிலங்களில் பாதியை அவர்களுக்கே தந்து மறு பாதியையும் மேற்பார்க்கும்படி கூறினார்.