காதல் மயக்கம்
117
விசய: ஆனால் நான் அப்பயனை முழுவதையும் கொடுத்து நாட்டையும் செல்வத்தையும் நல்லவாழ்வையும் கொடுக்கச் சித்தமாயிருக்கிறேனே. என் பழியை ஏன் இன்னும் பின் வாங்கக்
கூடாது?
குருக்கள்: நீங்கள் என்றென்றைக்கும் அழிவுற்று உலகுக்கு ஒரு படிப்பினையா யிருக்க வேண்டும். நீ நல்லவனாகவும் நேர்மையுடையவனாகவும் இருந்தால், உன் அழிவு இன்னும் பயன்தரும். எவ்வளவு நல்லவனாயிருந்தாலும் முன்னோர் பழிவிடாதென்பதை அவர்கள் அறிவர்.
விசய: உலகுக்கு நீங்கள் உங்களுக்கு வேண்டிய படிப் பினைத்தர நானும் என் சூதறியாக் குழந்தைகளுமா பலியிடப் படவேண்டும்.
குருக்கள்: ஆம், ஒரு மனிதன் பலியிடப்படுவது பெரிதல்ல. அதனால் ஏற்படும் உலக நன்மை பெரிது. அரசனாகிய உனக்கு இது தெரிந்திருக்கவேண்டும்.
விசய: அதுசரியே. ஆனால் உங்கள் படிப்பினையோடு இன்னொரு படிப்பினையும் உலகுக்கு ஏற்பட்டுவிடுமே. முன்னோர் பழி செய்தபின் எவ்வளவு நல்லவனாயிருந்தும் பயனில்லை. பழிசெய்தாலும் ஒன்றுதான், நன்மை செய்தாலும் ஒன்றுதான். கடவுள் கண்களில் கழிவிரக்கமும் நற்குணமும் பயன்படா என்ற பாடமும் உலகில் பதிவது கெடுதலல்லவா? பழி செய்தவனுக்குப் பிறந்தவனுக்கும், அவன் குடியிலுள்ளவர் களுக்கும் பழி செய்வதன்றி வேறுவகையில்லை என்று ஆய்விடாதா?
குருக்கள்: கடவுள் நம்பிக்கையுடையவன் இதையெல்லாம் ஆராயமாட்டான். அவன் கடவுளை நம்பியிருப்பான். நீ வேண்டு மானால் இப்படி ஆராய்ந்து இன்னும் பழிசெய். பழிசெய்வதும் நன்மை செய்வதும் பழிவிருப்பத்தாலும் நன்மை விருப்பத் தாலுமே. பலனை எதிர்பார்த்துச் செய்யும் நன்மை நன்மை யாகாது.
பழியால் உலகுக்குப் படிப்பினை வரவேண்டும் என்று முன்னே கூறிய குருக்கள் உரைக்கு இது முரண்பட்டதென்பதை மன்னன் கவனிக்கவில்லை.