உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 25.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




6. இன்பமும் துன்பமும்

பெண்கள் உலகில் அக்குவின் பெயர் எல்லாவகை இன்பங்களும் நிறைந்த வாழ்க்கைக்கு மறுபெயராய் விளங்கிற்று. அவள் அழகு வாய்ந்தவள். அவள் கணவன் சாத்தன் அவளிடம் அன்பும் ஆதரவும் உடையவனாயிருந்தான். அவர்களுக்கு நிறைந்த செல்வமும் இருந்தது. அவர்கள் நாகரிகமும் நற்குணமும் உடையவர்களாயிருந்தபடியால், அவர்களுக்குப் பெரும்பாலும் பகைவரே கிடையாதென்னலாம்.

அக்குவின் வாழ்க்கையில் ஒரே ஒரு குறை இருந்தது. அவளுக்கு ஒரு குழந்தை பிறந்து சிலநாளில் இறந்துபோயிற்று. அதன்பின் குழந்தையில்லாதிருந்தது. இறந்த குழந்தையின் நினைவு சிலநாள் அவள் இன்ப வாழ்வைக் கறைபடுத்தினாலும் நாளாக ஆக அவள் அதை மறக்கலானாள். ஆனால் அந் நிகழ்ச்சியை மறந்தபின்னும் அதன் ஒரு விளைவு அவள் அறியாமலே அவள் வாழ்வில் எதிர்பாராத இடையூறுகளைக் கொண்டு வந்தது.

அவள் குழந்தை இறப்பதற்குக் காரணமான செய்தி அது பிறந்த ஐந்தாம் நாள் அதன் தோள்பட்டையில் ஒரு சிவப்புப் புள்ளி தோன்றியதேயாகும். பேறு காலத்தில் அவளைக்கவனித்த மருத்துவச்சி சச்சி அதைக்கண்டதும் 'அம்மா இது பொல்லாத அறிகுறி. இக்குழந்தை இதனால் சில நாளில் இறந்துவிடும்' என்றாள். அவளது இவ்வுரை கேட்டுத்தாய் மிக வருந்தினாள். அதை ஒரு முன்னறிவிப்பு என்று கொள்ளாமல் அதனை ஒரு அவச்சொல் என்று அவள் எண்ணினாள். சிலநாளில் குழந்தை இறந்துவிடவே அவள் கரிநாக்குத்தான் பலித்துவிட்டது என்று எண்ணிய அக்கு அதனைப் பலரிடம் கூறிவந்தாள். சச்சியின் தொழில்முறையில் இது பெருங்குந்தகங்கள் விளைவித்தது. சில நாட்களில் அக்குவும் மற்ற மக்களும் இதனை மறந்தனர். ஆனால்