128
அப்பாத்துரையம் - 25
வந்து உண்ணுகிறேன் என்று வீட்டில் கூறிவிட்டு அவனை நாடி வந்தான். வழிபாடு முடியட்டும் என்று சற்று இருந்து பார்த்தான். அன்றைய வழிபாடு முற்றுப்பெறும் வழிபாடாகக் காணவில்லை. ஆகவே முனிவன் போலக் கைகூப்பி உட்கார்ந்திருந்த அவனைப் பிடித்து அசைத்து 'என்னப்பா நீலு, என்ன இத்தனை ஆழ்ந்த வழிபாடு. ஏன் இன்று வீட்டுக்கு வராமலே இங்கே இருக்கிறாய்’ என்றான்.
நீலகண்டன் திட்டமிட்ட நாடகத்திற்குத் தொடக்க மணியாய் இது அமைந்தது. அவன் சாத்தன் கை தன்மீது பட்டதுமே உரக்க, 'கடவுளே, என்னைச் சூழ்ந்துள்ள மாய வலையிலிருந்து என்னைப் பாதுகாப்பாயாக.நண்பன் வீடென்று நம்பி நான் வீழ்ச்சியடையாமல் காப்பாயாக' என்று கதறினான்.
சாத்தனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. “என்னடா நீலு? என்ன, மாயவலை என்கிறாய். பழி என்கிறாய். ஒன்றும் விளங்க வில்லையே. பேசாமல் வழிபாட்டை முடித்துக்கொண்டு என் வீட்டுக்கு வருவது தானே!
நீலகண்டன்: போதும். உன் வீட்டுக்கு வந்ததும் போதும். என் மனச்சான்றுக்கு மாறாகப் பழியேற்க வேண்டி வந்ததும் போதும்.
சாத்தன்:ஏன்,உன் மனச்சான்றுக்கு மாறாக உன்னை நடக்க யார் வற்யுறுத்துகிறார்கள்?
நீலகண்டன்: யார்? நீயும் உன் மனைவியும் தான். நீ குறிப்பறியாத முட்டாளாய் என்னை அவள் வலையில் சிக்க வைக்கிறாய். அவள் ஒன்றுக்கு மஞ்சாப் பேயாய் வந்து வாய்த்தாள்.
சாத்தன்: என்ன நீலு, நீயா இப்படிப் பேசுகிறாய், அதுவும் அக்குவைக் குறித்து? அவள் என்ன செய்தாள்?
நீலகண்டன்: என்ன செய்தாளா, என் வாழ்வை, நல்ல பெயரைக் குலைக்கிறாள். உன் நட்பையும் நல்லெண்ணத்தையும் எடுத்துக்காட்டினாலும் கேட்கமாட்டேன் என்கிறாள். அவளுக்கு நீ பிள்ளையில்லாக் குறையை வைத்திருக்கிறாயாம்! உன் குறிப்பறிந்தே அவள் என்னைப் பழிக்கு இழுக்கிறாளாம்!