காதல் மயக்கம்
143
அவமதித்தாலும், தன் கணவன் இறந்ததுபற்றி அவள் கொண்ட துயரம் அம்முவை உருக்கிற்று. தனக்கும் அவளுக்கும் மட்டுமே பொதுவான இத்துயரத்தால் அவள் தைலத்தின் மிது பாசங் கொண்டாள். மேலும் உண்மையில் கைம்பெண்ணுக்குத் தாயகத்திலும் இடமில்லை, வேட்டகத்திலும் இடமில்லை என்பதை அவள் அறிந்தாளானாலும், கைம்பெண்ணுக்குரிய வசவு கேட்பதானால் தாயகத்தாரிடமிருந்து அதைக் கேட்பதைவிட வேட்டகத்தாரிடம் கேட்பது நன்று என அவள் எண்ணினாள். ஆகவே தைலத்துடனேயே வாழ எண்ணிக் கணவனிறந்த சில நாட்களுக்குப்பின் அவளைக் காணச் சென்றாள்.
தைலம் அவளை முகங்கொடுத்துக்கூடப் பாராமல் வாளா இருந்தாள். அம்மு முறைப்படி அவள் காலடியில் விழுந்து வணங்கி அவளைத் தாவிக்கட்டிக்கொண்டு "மாமி, என்னிடம் ஏன் பாராமுகமாயிருக்கிறீர்கள். தாங்கள் மைந்தனை இழந்து துயரமடைகிறீர்கள்.நான் கணவனை இழந்து துயருறுகிறேன். துயரத்தால் ஒன்றுபட்ட நம் வாழ்வை ஒன்றாகவே கழிக்க வந்திருக்கிறேன். என்னை நீங்கள் வெறுத்துத் தள்ளக்கூடாது” என்றாள்.
தைலம் அவள் பிடியை உதறிக்கொண்டு "உனக்கு இங்கே உணவுகொடுப்பது யார்?” என்றாள்.
அம்மு: "மாமி, நான் தங்களுடனிருந்து உழைக்கிறேன்.நான் நம் உழைப்பின் பயனை உண்போம். யார் நமக்குக் கொடுக்கவேண்டும்? ஏதோ உழைத்துழைத்துச் செத்தாலும் நம் அன்புக்குரியவருடன் விரைவில் போய்ச் சேரலாமல்லவா?”
கிழவி கோபங் கொண்டு "நீ வேண்டுமானால் சாகலாம் நான் சாக விருப்பங்கொள்ளவில்லை. உன்னோடிருப்பதும் எனக்கு மகிழ்ச்சியில்லை. உன்னைக் காணும் போதெல்லாம் இறந்த என்மகனை நான் எண்ண வேண்டிவரும். ஆயினும் உண்மையிலேயே உனக்கு என்னிடம் பாசம் இருந்தால் உன் தாய் தந்தையரிடமிருந்து எனக்குப் பொருள் தேடிக்கொண்டு வரலாம்” என்றாள்.