காதல் மயக்கம்
147
மணமாகாத இவ்விளைஞன் அம்முவை அண்டாது விலகி நடந்தாலும் அவள் பற்றி மிகவும் பரிந்து பேசுவான். குறிப்பாக அவளைக் கவனித்தும் வந்தான். அம்முவை யறியாமல் அவள் கவனம் அவன் மீது சென்றாலும் அவள் அது தனக்துத்தகாத நெறியெனத் தன்னையடக்கிக்கொள்வாள்.
ஒருநாள் யாருமில்லாத சமயம் எக்ஞன் அம்முவின் எதிர்வந்து ‘அம்மு, உன்னிடம் ஒரே ஒரு செய்தி கூறவேண்டும். கோபிக்காமல் கேள். நான் மற்றவர்களைப் போல் உன்னிடம் கெட்ட எண்ணத்துடன் நடக்கமாட்டேன். உன் மனநிலை யையும் ஒழுக்கத்தையும் நான் அறிவேன். உன்னை மணஞ்செய்து கொள்ள நான் சித்தமாயிருக்கிறேன். அவ்வுரிமையுடன்தான் உன்னிடம் பேச விரும்புகிறேன்' என்றான்.
அவனது மனத்தின் பாசம், அவன் நடை, தோற்றம் ஆகியவற்றில் விளங்கிற்று. அவன் நேர்மை அவன் பேச்சில் தெளிவாகத் தோன்றிற்று. அவன் தன்னிடம் பிற இளைஞர் போல் வசமுற்றும் தன் ஐம்புலனுமடக்கிக் கொண்டு நடந்ததை அவள் அறிவாள். அந்நிலையில் அவனிடம் உண்மை உரைக்க எண்ணினாள். 'அன்பரே, என் மனத்தை நான் இன்னும் அறிய வில்லை. சமூகத்திற்கு நான் அஞ்சுகிறேன். இரண்டாம் மணம் செய்யவும் துணியவில்லை. எவர் விருப்பத்திலும் ஏமாந்து விழுந்து தவிக்கவும் விரும்பவில்லை' என்றாள்.
எக்ஞன் அன்று மனமுடைந்து சென்றான். ஆனால் இதன் பின் அவன் துணிந்து தனிமையில் அவளுடன் பேசலானான்.
'இரண்டாம் மணம் செய்து கொள்பவர் பலர் பெருகி வருகின்றனர். இரண்டாம் மணம் செய்யாதவர்கள் எல்லாரும் முற்றிலும் தம்மைக் கட்டிக் கொண்டு தூய வாழ்வு வாழ் கிறார்கள் என்பதற்கில்லை. மறுமணமின்றி மனங்சிதைவதிலும் தவறுவதிலும் மறுமணம் செய்தல் மேலானது. அம்மு போன்ற பெண்கள் காதலறியாமல் கடமைமட்டுமறிந்த மனைவியர். அவர்கள் மறுமணம் உண்மையில் மறுமணமேயன்று; முதன் மணமேயாகும்' என்பன போன்ற பல உண்மைகளை எக்ஞன் அவளிடம் பன்னிப்பன்னிக் கூறினான். அம்மு மட்டும் இணங்கினால் போதும், பிறரை நாளடைவில் இணங்கவைக்கும் திறம் தனக்கு உண்டு என்றும் அவன் உறுதி கூறினான்.