10. மூடப்பழக்கங்களின் மீளா அடிமை
என்று
'இந்த ஆண்டுடன் நம் தருமத்திற்கு வயது பதின் மூன்றாகிறது. வெளியில் பதினெரு வயதுதான் சொல்லிவருகிறேன். பதினாறு, பதினைந்து என்று நினைத்தேன் என்று செவிட்டில் அடித்தது போல் சொல்லிவிடுகிறார்கள். என்ன செய்வது? இரண்டு வருஷத்துக்கு முந்தியே திருமணமா யிருக்க வேண்டிய குழந்தை!'என்று காமாட்சி தன் கணவன் ராமசுப்பனிடம் பேச்சோடு பேச்சாகக் கூறினாள். இராமசுப்பன் ஒரு கிட்டங்கியில் கணக்கனாக வேலைபார்த்து வந்தான்.
ராமசுப்பன்: என்னை என்ன செய்யச் செல்கிறாய்? தந்தையிடமிருந்து எனக்குக் கிடைத்த சொத்து ஒரு 75 ரூபாய்ச் சில்லறை. நீ கொண்டு வந்தது தாலிக்கேற்ற வெறுங் கழுத்து. நமது மாதவருமானம்பன்னிரண்டு ரூபாய். இந்த நிலையில் முதல் மகளைக் கூடிய மட்டும் நல்ல இடமாகப் பார்த்துக் கொடுக்கப் போய்க் கையிருப்பிலிருந்த 200 ரூபாயும் போக 300 ரூபாய் கடனாகவும் வாங்கிக் தொலைத்தோம். கடனாளிகளுக்கு இன்னும் ஈடு சொல்லி முடியவில்லை. சாவது வரை ஈடு செய்யப் போவதுமில்லை. தருமாம்பாள் மணத்தை எப்படி நடத்துவது என்று விழிக்கிறேன்.
காமா: எப்படியாவது நடத்தித்தானாக வேண்டும். கடன் வாங்கியோ திருடியோ கொள்ளையடித்தோ எப்படியாவது நடத்தியே ஆக வேண்டும்.
இ. சு: கடன் கால்காசு தருபவர் யாரும் கிடையாது, இந்தச் சமூகத்தில், திருடுவதற்கும் கொள்ளையடிப்பதற்கும் திறமையும் துணிவும் வேண்டும். அது இல்லை. அவளை மண முடிக்க