காதல் மயக்கம்
189
என்னிடம் தாராளமாக வந்து உதவிகேள். தயங்காதே” என்று சொல்லியனுப்பினாள்.
உலகிற்குச் சிறுதொகையானாலும் பார்வதியின் வறுமை யில் அது பெருந்தொகையாகவே பயன்பட்டது. சில நாட் களுக்குள் அது செலவாயிற்று. ஆனால் அதற்குள் அவளுக்கப் பத்தாமாதமாயிற்று. பிள்ளைபிறந்து பத்து நாள் சென்றபின் வறுமை மீண்டும் தலைதூக்கிற்று. அவளுக்கு வேலைசெய்ய முடியாத நிலையில் பிள்ளைகள் பட்டினியால் வாடின. ஆகவே மீண்டும் சர்வோபகாரியின் உபகாரம் நாடிச் சென்றாள். ஆனால் இத்தடவை அவள் முழு ஏமாற்றம் அடைந்தாள். பலநாள் பல மணிநேரம் காத்து இறுதியில் கண்டபோதும் அம்மையார் எதுவும் கொடாததுடன் வாயார வைது அனுப்பினாள். அண்டையிலுள்ள அன்பர்கள் அம்மையார் எவருக்கும் ஒரு தடவைக்குமேல் கொடுப்பதில்லை என்றும், அதுவும் சமய சந்தர்ப்பம் பார்த்துச் சிலருக்குத்தான் என்றும் உளவு கூறினர். அச் சிலருள் தான் ஒருத்தி என்ற ஆறுதலுடன் ஏமாற்ற மிக்கவளாய்ப் பாரு மீண்டும் வீடுவந்து பழய படி வறுமைக்கு உறவானாள்.
பாருவின் மூத்த பையன் சிலநாள் சளிக்காய்ச்சலில் வதைபட்டு உயிர் துறந்தான். அவனுக்கு மருந்து வாங்கவோ, கஞ்சி வார்க்கவோ பணமில்லாமல் கண்ணீருடன் அவனை அவன் பெற்றோர் எமனிடம் அனுப்பிவைத்தனர். ஆனால் அவனை அடக்கம் செய்யவும் அவர்களிடம் பணமில்லை. அம்பி யாரிடமோ இருபது ரூபாய் கடன் வாங்கி வந்து காரிய முடித்தான்.
பாரு: 'இந்த இருபது ரூபாயில் பாதி இரண்டு மூன்று நாளைக்கு முன் வாங்கிவந்திருந்தால் பிள்ளை பிழைத்திருப் பானே. இறப்பதற்கு வாங்கிய கடன் வாழ்விக்க வாங்கப்படாதா' என்று வயிறெரிந்து கேட்டாள். அம்பி 'நீ உலகமறியாமல் பேசுகிறாய். கெட்ட செலவிற்கு யாரும் கொடுப்பார்கள். நல்லதற்குக் கொடுப்பார்களா?' என்றான்.
பார்வதி மனங்கசந்து ‘உங்கள் தெய்வச் செயல்தான் ஒரு புதிர் என்பதற்கில்லை. உங்கள் தர்மமும் ஒரு புதிராய்த் தானிருக்கிறது' என்றாள்.