காதல் மயக்கம்
191
கழகத்தலைவர் வருகைக்காகக் காத்திருந்தாள். அரைமணி நேரத்துக்குள் நீண்ட அங்கியும் பாரிய தலைப்பாகையும் அணிந்த ஒருவர் வந்து ‘அம்மா நீயார், உனக்கு என்ன வேண்டும்?' என்றார்.
அவள் பணிவாக, ‘என் கணவனுக்கு ஏதாவது வேலை வேண்டும். வறுமையால் வருந்துகிறோம்? வேலை கிடைத்தால் நான் கூட உழைப்பேன்' என்றாள்.
தலைவர்: சரி. உன் கணவன் எப்போது சிறையிலிருந்து வந்தான். என்ன குற்றத்துக்காகத் தண்டனை பெற்றான்.
பாரு: ‘என் கணவன் குற்றம் எதுவும் செய்யவில்லை. வறுமைக்கொடுமையால் இனிக் குற்றம் செய்தாலுண்டு’
தலைவர்: அப்படியானால் நீ இங்கே ஏன் வந்தாய்? உன் கணவன் குற்றத்தண்டனைபெற்றுச் சிறைப்பட்டு, அதற்குப்பின் வேண்டுமானால் வரலாம். இப்போது இங்கே உதவி கிடையாது, போ' என்று அதட்டித் துரத்தினார்.
'தெய்வச் செயலின் புதிரைத் தோற்கடிக்க வைக்கிறது இவ்வுலகச் செயலின் புதிர். இவ்வுலகமே அத்தெய்வத்தையும் படைத்திருக்கவேண்டும்' என்று எண்ணினாள் பாரு. கழகத் தலைவர் இப்பெண்ணாராய்ச்சியாளர் கூறுவது புரியமாட் டாமல் திகைத்தார். பின் ‘ஏதோ பைத்தியம் போலும்' என்று ஆறுதலடைந்து கொண்டார்.
ஒரு சில நாள் கழித்துப் பாருவின் ஊரில் அந்த வட்டத்தின் 'குழந்தைகள் உடல்நல வாரம்' நடைபெற்றது. 'சாக்காட்டுக்கும் பட்டினிக்கும் இரையாகிவரும் குழந்தைகளை வைத்துக் கொண் டிருக்கிறோமே. குழந்தைகளின் உடல் நலத்துக்காகக் கூடும் விழாவுக்கு அழைத்துச் செல்வோம். ஏதாவது உதவி அல்லது அறிவுரையாவது கிடைக்கும்' என்று எண்ணினாள்.
அவளுக்கோ அவள் குழந்தைகளுக்கோ உள்ளே நுழை யவே இடம் கிடைக்கவில்லை. கூட்டத்தில் புகுந்து முன் சென்று நின்ற போதும் அங்கே விதவித ஆடை உடுத்த செல்வச் சீமாட்டி கள் குழந்தைகளுக்கே பரிசுகள் வழங்கப்பட்டது கண்டாள். அவள் குழந்தைகளை ஏறெடுத்துப் பார்ப்பார் இல்லை.