காதல் மயக்கம்
197
விட்டு, அவன் தனியிடத்தில் அமர்ந்து சென்றான். உமா ஏறிய வண்டியில் அவளுடன் முகமூடியணிந்த உயர்குடி நங்கை ஒருத்தி இருந்தாள். வண்டிபுறப்பட்டபின்பே அவள் தன் முகத்திரையைச் சற்று விலக்கினாள். விலையுயர்ந்த ஆடையணிகளை யுடையவ ளாயும் பேரழகியாயும் அவள் காணப்பட்டாலும், அவள் முகம் எவர் மனத்தையும் வருத்தத்தக்க துயரத் தோற்றமுடையதா யிருந்தது. இயற்கையாகவே கனிந்த உள்ளமுடைய உமா அவளை அணுகி ‘அக்கா! நீ இவ்வளவு துயரமுடையவளாகக் காணப்படகிறாயே. உனக்கு என்ன இன்னல் நேர்ந்ததோ?' என்றாள்.
முகமூடிமாது: பெண்களுக்கு வேறு என்ன இன்னல் வேண்டும்? எல்லாம் மணவினையால் ஏற்பட்ட இன்னல்தான்.
உமா: மணவினை துன்பம் இப்போதுதான் கேட்கிறேன். அம்மா! மணவினை பொதுவாக இன்பமல்லவா தரும்?
மு. மா: 'இன்பம்போல் தோற்றக்கூடும், அம்மா. உண்மை யில் ஓர் ஆணை நம்பி கைப்பிடித்ததன்பின், பெண்களுக்குத் துன்பத்தைத்தவிர இன்பம் கிடையாது. மணம் என்பது ஒரு சூதாட்டம். அதில் இழப்பது எப்போதும் பெண்கள்தான். விதி கணவன் கையில் ஒரு பொம்மையாக நம்மை ஒப்படைத்து வருகிறது. கணவனை நாம் நம்பினால் கேட்டைவது உறுதி. அவர்கள் காதல் நொடிக்கு நொடி மாறுவது. அவர்கள் இழைக்கும் தீமைகளோ எல்லையற்றவை. இவற்றிலிருந்தெல்லாம் பெண்ணாய்ப் பிறந்தவர்களுக்கே ஒரே ஒரு விடுதலைதான் - அதுதான் சாவு'
வெளிப்பார்வைக்குச் செல்வமும் சிறப்பும் நிறைந்த அம்மாதின் முகத் தோற்றத்திலும் பேச்சிலும் உள்ள மனக்கசப்பு, மன உடைவு ஆகியவை எவர் உள்ளக்கிளர்ச்சியையும் அழிப்பவை யாகவே இருந்தன. ஆயினும் உமா தன்னைச் சமாளித்துக் கொண்டு பேசலானாள்.
உமா: நான் மணமானவள். ஒரு குறையுமின்றி இன்ப மாகவே இருக்கிறேன்.