(200
அப்பாத்துரையம் - 25
தந்தையை வெறுத்த வெறுப்பு அவளைத் தாக்கவில்லை. ஆனால் சுந்தர் இதுவரை உமாவிடம் காட்டிவந்த காதல் பசப்பு முற்றிலும் மாறிற்று. அவன் அவளுக்குக் கடிதம் எழுதுவதையே நிறுத்திவிட்டான். அவன் கிருஸ்தவ மாதாகிய லூஸி ஸில்வர்டேல் என்பவளைக் காதலித்ததாக ஊரில் அலர் தூற்றப்பட்டது.
உமாவுக்குக் கணவன் புறக்கணிப்பு மிகவும் வருத்தத்தைத் தந்ததாயினும், கணவனிடம் இருந்த மதிப்பு ஒரு சிறிதும் மாற வில்லை. ஆகவே அவள் அலர் தூற்றலை ஒரு சிறிதும் நம்பாமலே இருந்தாள். ஆனால் உண்மை எத்தனைநாள் மறைந்திருக்க முடியும். ஒரு நாள் அவள் பெயருக்கு அவனிட மிருந்து பதிவுசெய்யப்பட்ட கடிதம் ஒன்று வந்தது. தன் கணவன் தனக்குப்பதிவுசெய்த கடிதம் அனுப்புவானேன் என்று அவளுக்குப் புரியவில்லை. கடிதத்தை உடைத்துப்பார்த்ததும் அவள் தலைசுழன்றது. சுந்தர் அதில் தான் கிரிஸ்தவசமயம் தழுவிவிட்டதாகவும், அவளும் கிரிஸ்தவளாக இணங்காவிடில் அவளை மணமறுப்புச்செய்து வேறு கிரிஸ்தவமாதை மணந்து கொள்ளப் போவதாகவும் எழுதியிருந்தது. அவள் காதல் சமயத்தையும் எதனையும் அவனுக்காகத் துறக்கத் தயங்கவில்லை. ஆனால் அவன் சட்டத்தின் காரணமாகவே இதனை எழுதினான் என்பதையும், அவளை விட்டொழிவதற்கே ஆர்வமுடையவனா யிருந்தான் என்பதையும் அவள் கண்டாள். ஆகவே அவள் தன் தமக்கை, உறவினர் ஆகியவர்கள் அறிவுரைக்கிணங்கிச் சமய மாறமறுத்து எழுதிவிட்டாள். ஒரு சிலநாட்களில் கணவனுடன் லூஸி செய்துகொண்ட மணவிவரம் வெளியிடப்பட்டது. உமாவுக்கும் அழைப்புக் கடிதம் அனுப்பப்பட்டது. இவ்வழைப்பு அவர்கள் மணவினைக்குச் சட்டப்பாதுகாப்பு அளிப்பதற்கு மட்டுமே என்பதை அவள் பின்னால் உணர்ந்தாள்.
உமாவைச் சமயமாறவேண்டாம் என்று அறிவுறுத்திய அதே தமக்கையும் உறவினரும் அவள் நிலைமை அவள் தலை விதியால் நேர்ந்தது என்றும் நாக்கில் நரம்பில்லாமல் இழித்துப் பேசி ஒதுக்கலாயினர். அன்பற்ற கணவன் சமயத்தைச்சாக்கிட்டுத் தன்னை வெறுத்துத் தள்ளினது ஒருபுறம்; அதேபோலச்