உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அப்பாத்துரையம் 25.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




42

அப்பாத்துரையம் - 25

காதலுக்குக் கண்ணில்லை என்ற முதுசொல் அவர்கள் இருவர் காதல் போக்கை விரைவுபடுத்திற்று.

கிளிம் தன் குறிக்கோளின் திட்டத்தில் கருத்தூன்றி அதற்குத் தன்னைத் தகுதியாக்கி இரவுபகல் படித்தான். ஓய்ந்த நேரம் உலாவச் சென்றான். உலாவல் அவனை இயல்பாகவே யூஷ்டேஷியா இல்லத்தின் பக்கம் இழுத்துச் சென்றது. அவளுடன் நீண்டநேரம் போக்கி அவன் வருவான். அன்னை அவனிடம் வெளியே போனால் “இவ்வளவு நேரம் ஏன்?” என்று கேட்கும்போதெல்லாம் அவன் உலாவச் சென்றதும் யூஷ்டேஷி யாவைக் கண்டு பேசியதும் கூறுவான்.பாவம், தாய்மனம் அவன் மனப்போக்கையும் நிலையையும் அறிந்தது. ஆனால் தாம்சின் அவளை மீறியது போல, அவனும் மீறுவது கண்டாள். அவள் அன்பு அவனை நாடிற்று. அவள் அறிவு அவனைக் கண்டித்தது. அவனிடமிருந்து இப்போக்கு அவளைப் பிரித்து வைத்தது.

தாய்க்கும் மகனுக்குமிடையே கல்வித்திட்ட வகையில் நிகழ்ந்த அதே போராட்டம் காதல்வகையிலும் நடந்தது. முடிவும் அதே முடிவுதான் ஏற்பட்டது. அவன் கல்வித் திட்டத்தைக்கூட அவள் ஓரளவு ஏற்க முடிந்தது. அவன் காதல் திட்டத்தை அவள் முழுமூச்சுடன் எதிர்த்தாள்.

அவன் அவளுடன் மிகுதி பேசுவதையே நிறுத்தினான். அவளும் அப்படியே தனித்து ஒதுங்கிவிட்டாள். ஏதிலார்போல நடந்து பிறர் முன்னிலையில் ஒப்புக்குத் தாய்பிள்ளையாக அவர்கள் உணர்ச்சியின்றிச் சிறிதளவு சொல்லாடினர்.

காதலர் இருவரும் அடிக்கடி சந்தித்து மகிழ்ந்தனர். கிளிம் முகத்திலுள்ள அம்மகிழ்ச்சி திருமதி யோப்ரைட்டின் கண்ணுக்குத் தப்பவில்லை. தன் காதலைப்பற்றி அவன் பேச உறுதிகொண்ட அன்று, முன்பே அதை அறிந்துகொண்டவள் போல அவள் முறைப்பாயிருந்தாள்.

அன்று அவர்கள் மாறுபாடு உச்சநிலை அடைந்தது. அவள் யூஸ்டேஷியாவைத் தான் ஏற்க முடியாது என்று கூறிவிட்டாள். "சரி, அப்படியானால் நான் வேறு வழி பார்த்துக் கொள்ளுகிறேன்” என்று கூறி அகன்றான் அவன்.